குருமகாத்மீயம்-உபதேசம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!
இடைக்காடர் சித்தர் அருளியது!

பல்வேறு உபதேச முறைகளிலே ஒவ்வொரு உபதேச முறையின் நிலைப்பாட்டிலும், அந்த உணர்வின் வேகம், அதன் ஆழம்,
அவ்வாறு உபதேசிக்கப்படுவதால் அவரவரின் உயிர் நிலைகளுக்குத் தக்கவாறு  பல்வேறு ஆன்ம எழுச்சிக்கும், உத்வேகத்துக்கும், ஆன்ம நிறைவுக்கும் அது எடுத்துச் செல்கிறது.

பாதைகள் வேராயினும், அதனைக் கடந்து செல்கின்ற முயற்சிகளில் வேறுபாடு இருப்பினும், அந்த இலக்குகளைக் கடந்து  இலக்கற்ற நிலைகளையும் கடந்து தன்னுள்ளே இருக்கின்ற மகாசக்தியை உணரும் பொருட்டே, அணைத்து உபதேச முறைகளும் உரைக்கப்பட்டது. 

பண்டைய காலங்களில் இந்த உபதேசமானது மந்திரம், தந்திரம், நேத்ரம், பக்தி பஜனைகள், தாந்த்ரீகம் , வேத உபநிடதம் ஆகியவை மூலமாக கொடுக்கப்படுகின்ற உபதேசங்களாக இருந்தது.

ஆனால் அரிதிலும் கிடைத்தற்க்கரிய, எல்லா உபதேசங்களைக் காட்டிலும், இந்த மெய் அறிவைத் தூண்டுகின்ற, சுட்டிக் காட்டுகின்ற, மெய் அறிவிலே பரிணமிக்கின்ற,  அஷ்டமும் ஒன்றும் சேர்ந்து,
இந்த நவத்தில் கலக்கின்ற அற்புதமான உபதேசமானது, ஒரு மனிதன் தன்னுடைய சாகாக் கலையை, சாகா வரத்தைப் பெறுகின்ற அற்புத முறையாகும்.

எல்லா உபதேசங்களின் முடிவும் பூரணம் என்று சொல்லப்படுகின்ற மகாசக்தி உபதேசத்தின் ஒரு  நிலைகளிலே வந்து முடிவடைகிறது!

சத்குருவே சரணம்!சந்தோஷம்!
குருமகாத்மீயம் – மெய் உபதேசத்தைப் பெற, ஒரு உயிர் மேற்கொள்ளும் பயணம்
இடைக்காடர் சித்தர் அருளியது!

இந்த உபதேச நிலைகளை அடைவதற்கு ஒருவர் எடுக்கின்ற காலம், அதற்கு முனைப்படுகின்ற வைராக்கியம், அவர்கள் காக்கின்ற அனுஷ்டானங்கள், அனைத்தும் சற்று மிகைப்பட்டு இருக்கின்ற காரணத்தாலும், அதனைப் பற்றிச் செல்லமுடியாமல், அதன் பூரணத்தை உணர முடியாத நிலைகளில், பாதியிலே தன் வாழ்நாள் முழுவதும் கழிந்து, பூரணத்துவம் பெறாத நிலைகளில் உடலை விட்டு, மீண்டும் பிறப்பெடுத்து மீண்டும் அதற்குரிய அதிசார நிலைகளிலே அந்த உபதேசத்தைப் பெற்று, அதை மீண்டும் தொடர்ந்து இவ்வாறாக சுழன்றுகொண்டே வருகிறது. 

எவ்வாறு பல்வேறு பரிணாம வளர்சிகளைக் கடந்து ஆறாவது அறிவு படைத்த மனிதனாய்,  பின்னர் பல்வேறு பிறவிகளை எடுத்து  ஏழாம் அறிவு, எட்டாம் அறிவு என்று அஷ்டத்தை உணருகின்ற இந்த பரிணாம வளர்ச்சி போன்று, ஒவ்வொரு மனித குலமும் எல்லா நிலைகளையும் கடந்து, பூரணமாக ஆதியாய் விளங்குகின்ற, இந்த மாபெரும் அஷ்டக் கலை, மௌன வேதம், ஊர்தவம், அஜபா என்ற உன்னத நிலையை உணர்த்துவதே இந்த உபதேச நிலையாகும்!

இதன் மூலம் மாபெரும் உயர்ந்த சக்தி நிலைகளைப் பெற்று, அந்த சரம் என்ற சரத்தில் ஏறி, பரம் என்ற பரத்தில் ஏறி, நவமாய் விளங்குகின்ற முக்கண்ணனாம், ஒளியைக் காணுகின்ற பயணமே இந்த உபதேசம் ஆகும்!!

சத்குருவே சரணம்!சந்தோஷம்!
குருமகாத்மீயம் – உபதேசத்தின் மூலம் உயிரின் பரிணாம வளர்ச்சி
இடைக்காடர் சித்தர் அருளியது!

முன்னொரு காலங்களிலே,
பலகாலங்கள் பூரண பிரம்மச்சரிய நிலைகளில் இருந்து, பல்வேறுவிதமான சம்பாஷனையெல்லாம் செய்து, தன்னுடைய குருவிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளையெல்லாம் செய்து, ஒரு இடையன் குலத்தில் இருக்கின்ற எல்லா தர்மங்களையும் செய்து, ஆடு மேய்த்து, மாடு மேய்த்து, இதை அடைவதற்கு படாத பாடு பட்டு, இந்த உபதேசங்களை பெறுகின்ற நிலை இருந்தது.

இந்த உபதேசங்களை சில ஞானியர்கள் நேத்திரத்தின் மூலமாகவும், சிலர் தொட்டுகாட்டுகின்ற உபதேசமாகவும் இருந்தது. 

ஆனால் ஒவ்வொரு உபதேசங்களிலும் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு இருந்தது.

பூஜ்ய நிலையின் பொருள்

ஒரு உபதேச நிலைகளிலே குரு சீடன் என்கின்ற நிலையை வைத்துக் கொண்டால்,
கொடுக்கின்ற நிலையில் குருவும், ஏற்கின்ற நிலையில் சீடனும் இருந்து, அந்தத்துவம் என்ற அந்த காரணத்தை உபதேசமாக அளிக்கும் பொழுது,  பூஜ்யம் என்ற நிலையில் இருக்கவேண்டும். 

பூஜ்யம் என்றால், சூனிய நிலையில் இருந்து எந்த துக்கங்கள், பந்த பாசங்கள் எதுவும் இன்றி, எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், எளியவன் என்ற நிலைப்பாடுகள் இன்றி, பூரணம் என்ற நிலையிலிருந்து, தன்னகத்தே, தன்னுள்ளே மகாசக்தியாய் விளங்குகின்ற அந்த இருப்பு இடத்திலிருந்து மாபெரும் அந்தத்தை உயிர்பொருளை  உணர்த்தி, அதை மேலெழுப்பி , உயிர்பொருளை வாசம் செய்கின்ற அந்த வீடுகளில் அதை நிறுத்தி, அந்த குதிரையை அங்கே சஞ்சரிக்க செய்ய வேண்டும்.

எவ்வாறு ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றானோ, அதேபோல் அவன் உயிர் நிலைகளும் சற்று உயர்ந்து, உடல் எனும் வீட்டை கடந்து, மனம் எனும் மூட்டை கடந்து, அறிவெனும் வீட்டைக் கடந்து, உயிரெனும் வீட்டைக் கடந்து, அங்கிருந்து நவம் என்னும் அற்புத ஒளியை அடைந்து, அவ்வாறாக ஒரு உயிர் மேலோங்கி சென்று, மாபெரும் பரிணாம வளர்ச்சி பெறுகிறது!!