குருமகாத்மீயம் – ஒரு உயிரின் மறுபிறப்பு

குருமகாத்மீயம் – ஒரு உயிரின் மறுபிறப்பு

சத்குருவே சரணம்! சந்தோசம்!
(இடைக்காடர் சித்தர் அருளியது)

மாபெரும் இந்த மௌன வேதத்தை உபதேசிக்க வந்த பண்டிதர்களுக்கு, மெய்ஞான ஆசிரியர்கள் என்று அழைக்கப்படும் சிரத்தை வேதியர்கள் ஆவார்கள். சிரத்தை என்றால் சிரசு, வேதியர்கள் என்றால் உபதேசிப்பவர்கள். 

இந்த ஆத்மத்தின் நிலையும், ஒளியின் நிலையும், அஷ்டத்தின் நிலையும் இந்த சிரசில் இருக்கிறது. ஆகவேதான் அந்த உண்மையை உணர்த்துகின்ற வல்லவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு நாம் அந்த திருநாமத்தை வழங்குகின்றோம். 

ஒரு மாபெரும் உபதேசம் அளிக்கப்படும்பொழுது ஒரு தாயின் கருவறை எப்படி ஒரு நிலையில் இருக்குமோ, அதே போன்று இதுவும் ஒரு பிறப்பாகும். அது தாயின் உடலினுள் இருந்து வெளிப்படுகின்ற பிறப்பு. இது நம் உடலுக்குள் இருந்து  வெளிப்படுகின்ற பிறப்பு. 

இந்த உபதேசம் காலம், கோள் அனைத்தையும் கடந்து நிற்பதாகும். எந்த வேலைகளிலும், எந்த முகூர்த்தத்திலும் இந்த உபதேசத்தை அளிக்கலாம்.

ஒரு உபதேசத்தை அளிக்கும்பொழுது, மீண்டும் ஒரு பிறப்பாக கணக்கில் கொள்கின்ற காரணத்தால், இந்த  திருவாசலில் பிறக்கின்ற பிறப்பும், அதன் சாரத்தையும், சத்தியத்தையும் பெற்றதால்,   இந்த உபதேசம் பெறுகின்ற வேளை, இந்த நாள், இந்த முகூர்த்தத்தைக்  கணக்கில் கொண்டு, இதை உன் ஜென்மமாக  எண்ணி, நவகோள்களின் அடக்கத்தை  இந்த கட்டங்களிலே அடக்கி கணக்கிட்டால், உன் விதியின் வெளிப்பாடும், உன் மறுபிறப்பின் வெளிப்பாடும் அங்கே விளங்கும்.  

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் இந்த உபதேசத்தைப் பெற்ற மாத்திரத்தில், உங்கள் ஜனன கால ஜாதகத்தின் அமைப்புகள் மாறி, முழுவதும் உருமாறி, கரு மாறி  எல்லாம் மாறிய நிலைகளில் குருமாறியாக விளங்குவீர்கள். ஆகவேதான் உணர்வைப் பெற்ற ஒவ்வொருவரும் குருமாறி ஆவீர்கள். 

குருமாறி என்றால் குருவின் தன்மையோடு மாறியிருக்கின்ற, அதாவது தாய் தந்தை என்கின்ற நிலையிலிருந்து அவர்களின் கருவிலிருந்து வெளிப்பட்ட நிலைகள் மாறி, குரு என்னும் நிலைகளோடு இருக்கின்ற காரணத்தால் நீங்கள் அனைவரும் குருமாறி ஆவீர்கள். 

இத்தகைய நுணுக்கங்கள் அந்த மெய் அறிவிலே பதிந்திருக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, ஏதோ ஒன்று கொடுப்பது போன்று, ஏதோ ஒன்று சொல்லுவது போன்று, உணர்த்திக்காட்டுவது போன்ற ஒரு நிலை ஏற்படுகின்றது. 

ஆனால் இதனுடைய தன்மைகளை சீராக ஆராயும் பொழுது, அதனுள்ளே இருக்கின்ற நுணுக்கங்கள், ஆளுமைகள், தெய்வத்தன்மைகள், மகத்துவம் வாய்ந்த நிலைகள், குருவின் உருமாறி நிலைகள் அங்கே பதியப்படுகிறது.