குருமகாத்மீயம் – குரு கிரகம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!

வேற்று கிரகங்களின் தன்மை

(இடைக்காடர் சித்தர் அருளியது)

எப்படி பூமி ஒரு உலகமோ, அதே போன்று  ஒவ்வொரு கிரகங்களும், தனித்தனியான உலங்கங்களாகவே காணப்படுகிறது. 

ஒவ்வொரு கிரகங்களுக்கு உள்ளும், அதனதன் தன்மைகளுக்குத் தக்கவாறு, அங்கே சில வேற்று கிரக மனிதர்கள், வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்கள். அவர்களும் மனித இனங்கள் தான்.

ஆனால் அவர்கள் ஒரு மனித இனத்தைப் போன்று ஒரு சரியான அமைப்பைப் பெற்றிருக்க மாட்டார்கள்.

கோனையாக, தட்டையாக, தப்பையாக, நீண்டு, நெலுங்கி என பல்வேறு விதமான சூழல்களில், பல்வேறு விதமான அமைப்புகளில் உங்களுடைய அறிவிற்கு அப்பாற்பட்ட நிலைகளில் அருவெறுக்கத்தக்க, காண இயலாத, கண்டாலும் பொசுக்குகின்ற அளவிற்க்கு ஆற்றல் படைத்தவர்கள் அவர்கள்.

ஆகவே ஒவ்வொரு கிரகங்களிலும், ஒரு கிரகத்திற்குள்ளும் அதை சார்ந்து வாழக் கூடிய சில வாசிகள் அங்கே இருக்கிறார்கள். 

அவர்களைப் பொறுத்தவரை நீங்கள் வேற்று கிரகவாசிகள். உங்களைப் பொறுத்தவரை அவர்கள் வேற்று கிரக வாசிகள்.

ஆனால் என் போன்ற, உன் குரு பரஞ்சோதியைப் போன்ற குருமார்களுக்கு, எல்லா வாசிகளும் ஒரே வாசிகள்.

ஏனென்றால் ஒவ்வொரு வாசிகளுக்குள்ளும் நிறைந்திருப்பது அந்த ஒளியே! ஆக அந்த ஒளியை, அந்த உன்னதத்தை, அந்த பரஞ்சோதி என்கின்ற ஆதி சக்தியை, மகா சக்தியை உணர்ந்ததால், அதோடு இரண்டறக் கலந்ததால், எல்லாம் அதனுடைய படைப்பாய்த் தெரிகின்ற காரணத்தால் எங்கும், எதிலும், எந்நிலையிலும் அச்சம் என்பதே உனது குருவிற்கு கிடையாது!

இந்த பூமியிலிருந்து சற்று மேல் நோக்கிச் சென்றால், அங்கே வெவ்வேறு விதமான, வெவ்வேறு தரப்பட்ட மிகவும் கொடிய நஞ்சை விதைக்கக்கூடிய, நஞ்சை உமிழ்கின்ற, நஞ்சை கக்குகின்ற, நேத்திரத்தால் எரிக்கின்ற, நாக்கால் சுடுகின்ற என பல்வேறு நிலைகளில், ஒவ்வொரு கிரக வாசிகளுக்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள், குணாதிசயங்கள்,  ஆற்றல்கள், ஒவ்வொரு விதமான ஒளி நிலைகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆயுதங்கள், ஒவ்வொரு விதமான தற்காப்புக் கலைகள், அவ்வொவ்வருக்கும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு தக்கவாறு தன்னுடைய வாழ்கையை வாழ முடியுமே தவிர, அவர்கள் மற்ற கிரகங்களுக்குச் செல்லும் பொழுது அவர்களால் வாழமுடியாத சூழ்நிலைகள் அங்கே ஏற்படுகிறது.

குரு கிரகம்
 குரு என்னும் கிரகம்,  இந்த பூ உலகத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே பல ஒளி தூரங்கள் இருந்தாலும், இந்த பிரபஞ்சத்திலே பல்வேறு அடுக்கு நிலைகள் அங்கே இருக்கின்றது.

குரு என்கின்ற கிரகமானது பூதக் கண்களிலிருந்து பார்க்கும் பொழுது, ஒன்றாகத் தெரிந்தாலும் அது மூன்று என்கின்ற நிலைகளிலே பிரிந்து நிற்கிறது.

அந்த கிரகங்களுக்குள் சென்று பார்த்தோமானால், அந்த கிரகங்களுடைய ஆதிபத்தியம் அந்த கிரகத்தை ஒட்டி வாழக் கூடிய மனித குலத்தினுடைய பெயர் தான் குருவந்தர்கள்!

குருவந்தர்கள்

அந்த குருவந்தர்கள் சுமாராக 1 கோடி குருவந்தர் என்று கொள்ளலாம். இந்த பூ உலகிலே எத்தனையோ மனிதகுலங்கள் இருப்பதைப் போன்று, குருவந்தர்கள் என்று சொல்லப்படுகின்ற ஒரு இனம், ஒரு மனித கூட்டம் இருக்கிறது.

அவர்களுடைய உருவ அமைப்பானது ஒரு உதாரணத்திற்குச் சொல்லவேண்டும் என்றால், உங்களுடைய உடல் அமைப்பிலே பாதிப் பகுதி அளவுக்கு சிரசினுடைய வடிவம் இருக்கும். அதாவது உங்களின் உடலை நான்கு பங்காக பிரித்தால் அவர்களுக்கு இரண்டரைப் முதல் மூன்று பங்கு, அளவிற்கு சிரசானது இருக்கும்.

பின்னர் அவர்கள் சற்று ஊர்ந்து செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் அவர்கள் அங்கு இங்கு செயல்படுவதற்கு, கை கால்கள் என்று சொல்லபடுகின்ற சில நிலைகள் இருக்கிறது.

எப்படி ஒரு மனிதனுக்கு மூலாதாரம் என்று சொல்லப்படுவது இரண்டைரை அடி உயரம், இரண்டைரை சுற்றுக்கள் அங்கே இருக்கிறதோ, அதேபோல அவர்களுக்கு மூலம் என்று சொல்வது அந்த திருநாக்கையே அவர்கள் சொல்லுகிறார்கள்.

அந்த திருநாக்கானது இரண்டரை அடி நீளம் கொண்டது. அந்த நாக்கை அவர்கள் நன்றாக மடித்து உள்ளே வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் உணவைப் புசிப்பதில்லை. உணவென்றாலே அவர்களுக்குத் தெரியாது. பிராணனையே அவர்கள் தங்களது சக்தியாக மாற்றி அவர்கள் உண்டு வாழ்கிறார்கள்.

அவர்கள் பொன்னிற குருதியைப் பெற்றவர்கள். இங்கு மனிதர்களைப் போன்று சிவப்பு நிற குருதிகளை அவர்கள் பெறுவதில்லை.

அவர்கள் 10 குருவந்தர்கள் இந்த பூமியிலே இருந்தால், அவர்கள் 18 முறை பிராணனை இழுத்துவிட்டால், இந்த பூமியிலே பிராண வாயுக்கள் இல்லாத நிலைகள் ஏற்படும்.

அப்படிப்பட்ட அவர்களுக்கு நாக்கிலிருந்து உமிழ்நீர் வந்தால், அது நாகாஸ்திரத்தை விட கொடுமையானது. அவ்வளவு மோசமான, அவ்வளவு விஷத் தன்மையை கக்கக்கூடிய நிலைகள் இருக்கிறது.

அவர்கள் வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுவார்கள். மூன்றே மூன்று முறை!!

அந்த வெளிவிடும் காலங்களிலே, குரு கிரகத்திலே அசைவுகளை ஏற்படுத்தி, மீண்டும் அது தன்னைத் தானே சரிசெய்து கொள்ளுகின்ற நிலமைகள் அங்கே உண்டு.

அந்த குரு கிரகத்தை ஆளுகின்ற குரு வந்தர்களுக்கு அரசனாய் விளங்குபவர்கள், அல்லது இந்த குருவந்தர்களை வழிநடத்துபவர்கள் ஒரு குறிப்பிட்ட சாரார்; அதிலே 33 பேர்கள் குரு பாலகர்கள் என அழைக்கப்படுவார்கள்.

அவர்களை குரு என்ற கிரகத்தினுடைய 360 கோணங்களிலே அவர்களே காவலாய், அரணாய் அங்கு இருக்கக்கூடிய  மனித குலங்களை வழி நடத்தக் கூடியவர்களாய் விளங்குகிறார்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த குருவந்தர்களுடைய பார்வையானது, அந்த ஒளிகிரகத்திலிருந்து வருகின்ற பார்வையானது, இவர்களுடைய தவோ பலத்தினால், அங்கே ஒளிகளானது உற்பத்திசெய்யபட்டு, அந்த ஒளி கற்றைகளானது பூமியை நோக்கி வந்து  கொண்டே இருக்கிறது.

குருமகானின் வல்லமை 

எண்ணத்திலே குருவந்தர்களை ஆவாகனம் செய்து, அந்த குருவந்தர்களுடைய ஆற்றலையே சாபமாக கொடுக்கின்ற வல்லமையைப் பெற்றவர்களுள் உன் குருவும் ஒருவர். விஸ்வாமித்திரன், அகத்தியன், பரஞ்சோதி, பிதாமகர்  பீஷ்மர், கிருஷ்ணன், ராமன் என்கின்ற நிலைகளிலே, ஒரு உதாரணத்திற்கு சிலருடைய திருநாமங்களை சொன்னோம்!

அகத்திய முனிக்கு நிகரான சக்திகளையும் வல்லமைகளையும் பெற்றவர் குருமகான். பருவுடல் தாங்கி இருக்கின்ற காரணத்தால், சில வரையறைகள் அங்கே இருப்பதால், இயற்கையோடு இயற்கையாக இருக்கவேண்டும் என்கின்ற நியதியின் காரணத்தால், அவருடைய ஆற்றலானது பூரணமாக வெளிப்படுத்துவதில்லை.

அந்த ஆற்றல் வெளிப்பட்டால், இந்த பூமியானது தாங்குவதற்கு உரிய தன்மைகள் இருக்காது!!

நான் சொல்லுகின்ற இந்த உண்மையை அந்த ஆரத்திலே நிறுத்தி, ஆரத்திலே அழுத்தி, ஆரத்திலே சுழற்றி, ஆராதாரத்திலே ஆரமாய் இந்த அறத்தை நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உண்மையானது, சத்தியமானது இது நித்தியமானது ஆகும்!

ஆகவே ஒரு போதும் குருவினுடைய நிலைகளை, குருவினுடைய தன்மைகளை, குருவினுடைய எண்ணங்களை,குருவினுடைய  சித்தங்களை,குருவினுடைய எண்ணங்களுக்குரிய அபிலாஷைகளை ஒருபோதும் நீங்கள் நிராகரிக்கக்கூடாது.

குரு எந்நிலையில் இருந்தாலும் அவர் குருவே!  ஒரு குரு என்கின்ற நிலைகளை ஏற்றுக்கொண்டால், மகரிஷி என்கின்ற நிலைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஆத்மா குரு என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால், பின்னர் மீண்டும் அந்த எண்ணத்திலே சற்றும் அசைவு இருக்கக்கூடாது.

உதாரணத்திற்கு,  ஒரு மனைவியாக ஒரு பெண்டிரை ஏற்று,  பின்னர் அவள் பதிவிரதையா என்ற ஐயம் கொண்டால், எவ்வளவு கீழ்த்தரமாகக் கருதப்படுமோ அதேபோன்றுதான் ஒரு குருவை ஏற்ற பிறகு அவரின் பராக்கிரமங்களையோ, சக்திகளையோ எதையும் நீங்கள் சற்றும் எண்ணத்தில் கூட சலனப் படுத்தி பார்க்கக் கூடாது. அப்படி ஏற்பட்டால் அந்த சலனமே உங்களுடைய ஞானத்தின் உயர்வை தோஷமாக மாற்றி அது சற்று கீழ் இறக்கிக் கொண்டே செல்லும்!

குருமீது நீங்கள் எல்லா விதமான குணங்களையும் வெளிப்படுத்தலாம். குருவிடம் அன்பு காட்டலாம், குருவிடம் ஆசை காட்டலாம், குருவிடம் தர்க்கம் செய்யலாம், குருவிடம் கோபம் கொள்ளலாம், குருவிடம்  கண்ணால் கரையலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் குருவின் சக்தி, குருவின் ஆற்றல், குருவின் மகாத்மியத்தில் மட்டும் நாம் ஒரு போதும் சந்தேகம் கொள்ளக் கூடாது.