குருமகாத்மீயம் – சங்கல்பங்களின் நினைவும் மறதியும்

குருமகாத்மீயம் – சங்கல்பங்களின் நினைவும் மறதியும்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!
(இடைக்காடர் சித்தர் அருளியது!)

உபதேசமூர்த்தியாய், தன்னுடைய ஒளிப் பிரதமையை, உபதேசம் என்கின்ற நிலைகளிலே, முச்சந்தியில் பதித்து, மாமிச பிண்டமாய் விளங்கிய ஜீவனாகிய இந்த உடலினுள் இருக்கின்ற நித்யமான ஆத்மம் என்ற ஒளியைச் சுட்டிக் காட்டி, ஜீவ ஆத்மா என்ற புதிய படைப்பை ஏற்படுத்திய காரணத்தால் இவரே படைக்கும் பிரம்மாவாக, அவதாரப் புருஷனாக, தீர்க்க மகரிஷியாக, தீர்க்க தரிசியாக திகழ்கிறார்.

தன்னுள்ளே தனது சக்தியையும், பிரபஞ்சத்தின் உள் நிலைகளை பூரணமாக உணர்ந்து, அதுவாக லயித்த நிலையிலே, ஒளி பொருந்திய சத்திய புருஷரால் மட்டுமே ஜீவ ஆத்ம நிலையை அடைவிக்க முடியும்.

அது மட்டுமன்றி, இந்நிலைகளை காத்தும், இந்நிலைகளுக்கு தேவையானவற்றை ஏற்படுத்தியும், அல்லாதவைகளை சம்ஹாரம் செய்தும், இந்த மூன்று தொழில்களையும் சிறப்புற செய்ய இயலும்.

இந்த மூன்று தொழிலினுடைய அடிப்படை நோக்கமானது, ஒவ்வொருவருள்ளும் இருக்கின்ற செங்கோல் என்று சொல்லப்படுகின்ற வேலவனின் கோலை, அதன் நுனியில் இருக்கின்ற ஒளியை மஹா பிரகாசத்தோடு அனைவரும் ஜொலிக்கவேண்டியே, தன்னிகரற்ற ஆதி சித்தியாய் விளங்குகின்ற தன்மாத்திர நிலையான இந்த யோக நிலையை அளிக்கிறார்.

இந்த நிலையைப் பெறுவதற்கு பல்வேறு நிலைகளிலிருந்து, பல்வேறு விதமான மார்க்கங்களிலும், பல்வேறு பிறவிகளிலே, இந்த மாபெரும் உபதேசத்தைப் பெற்று, தன்னுடைய தன்மாத்திர நிலைகளை உணரவேண்டி, குருமாரிகளாகவே (மெய் உணர்வாளர்கள்) இருந்து, அது சொல்லில் மட்டுமே நிலைத்து நிற்க, அது காரியத்தில் இல்லாத நிலைகளிலே மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க, உங்களுடைய உணர்வின் ஏற்ற நிலைகள், ஆத்மத்தின் ஏற்ற நிலைகள், உங்களின் பிராப்தத்தின் நிலைகள், அதோடு குரு சீடன் என்கின்ற சம்பாஷனைகள், இவை அனைத்தும் அதன் தொடர்ச்சி. இவ்வாறு உபதேசம் பெற்ற நிலையில், தற்பொழுது 5 அல்லது 6வது பிறவியிலே நீங்கள் வாழ்ந்துகொண்டிருகிறீர்கள்.

இந்த பரஞ்சோதி வம்சத்தைச் சேர்ந்த அனைவரும், இந்த குருவோடு சம்மந்தபட்ட நிலைகளில் பெரும்பாலும் நம்மால் காணப்படுகிறது. இன்று நேற்று ஏற்படுத்தப்பட்ட உறவுகள் அல்ல!!

இப்பிறவியும் போதுமென்றால், அந்த முக்கண்ணன் அளித்த உபதேச வழிகளை பூரணமாக உணர்ந்து, இதோடு நீங்கள் முடித்துக் கொள்ளலாம்!!

இல்லையென்றால் மீண்டும் கருவறையைத் தேடி நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு பிறவியிலும், துன்பம் மட்டுமே அதிகரிக்கச் செய்யும்.

ஏனென்றால், துன்பம் அதிகரித்தாலன்றி இந்த உடலினுள் இருக்கின்ற ஜீவனை உங்கள் மனமானது நாடாது.

ஆகவே துன்பமும், துயரமும், வருத்தமும் கோபமும், துக்கமும், அவமானங்களும், அசிங்கங்களும், எல்லாம் அந்த  ஜீவனைப் பற்றுவதற்காகவே!

நிற்கதியற்ற நிலைகளில், நிராயுத பாணியாக, நிர்மூலமான நிலைகளில் உங்களை நிறுத்தி, அந்நிலையிலிருந்து, வேறு என்ன செய்வதென்று அறியாத நிலையிலே இந்த ஜீவனினுடைய நினைப்புகள், வாசனைகள் ஏற்பட்டு, அந்த வாசனைகளைப் பற்றி மீண்டும் அந்த உயர்ந்த நிலைகளை அடைவது பெரும்பாலும் அனைவருடைய பிறப்பாகவே அமைகிறது.

ஆகவே நீங்களாக இந்த தர்மத்தை நாடிச் சென்றால், இந்த நிர்மூலங்களையும், அவலங்களையும், அசிங்கங்களையும், சங்கடங்களையும், துக்கங்களையும், துயரங்களையும் நீங்கள் ஒரு போதும் அனுபவிக்க மாட்டீர்கள்.

முற்பிறவியில் இந்த உடலை விட்டு நீங்கள் செல்லும் பொழுது நீங்கள் செய்த சங்கல்பங்களை உங்களால் அறியாத நிலையில் இருக்கிறீர்கள்..

ஏனென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நீங்கள் காரணத்தை அறியாமல், காரியத்திலேயே சுற்றி, அதிலே சுழன்ற, நீங்கள் முற்பிறவியில் தேகத்தை விட்டு செல்லும்பொழுது, உங்களுடைய சங்கல்பத்தை உணர மறந்த காரணத்தால், உங்களின் அறிவிலே அந்த சங்கல்பங்கள் மறைக்கப்பட்டு, இப்பிறவியிலே மீண்டும் முக்கண்ணன் தன்னுடைய ஒளிப் பிரதமையை முச்சந்தியிலே பதித்து, அந்த சந்தியில் பதித்த உயிரானது, ஜீவ ஆத்மா என்ற நிலைகளில் உயர்ந்து மீண்டும் பிரம்மனாகவே தரிசனம் தந்து, உங்களின் சங்கல்பங்களை வெளிப்படுத்தும் நிலைகள் ஏற்படுத்தப்படுகிறது. !!