குருமகாத்மீயம் – சத்குருவை அடைய சுயபிராப்தம் தேவை

சத்குருவே சரணம்!சந்தோஷம்!

இடைக்காடர் சித்தர் அருளியது!

ஒரு மாபெரும் சத்குருவை அடையவேண்டும் என்றால், உனக்கு அந்த பிராப்தம் இருக்கவெண்டும்.

இது உன் பிறவியிலிருந்தே வந்த பிராப்தமாகும். உன் தாய் தந்தையின் பதிவுகள், அவர்களின் கூட்டு சேர்ப்பில் வந்த பிராப்தம் அல்ல.

நீ உன் சுயப்பிராப்தத்திலிருந்து எதை கொண்டு வெளிப்பட்டாயோ, அந்த வெளிப்பாட்டிலிருந்தே நீ இந்த குருவை அடைந்தாய்.

ஒரு சத்குருவை அடைவதற்கு எத்தனை எத்தனை பிறவிகள் வேண்டும் என்பதை புரியாத பகடவர்களாக இருக்கிறீர்கள்.

இதை உணர்ந்தால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு க்ஷணமும் அந்த குருவை ஆராதித்து போற்றும் நிலையை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

உங்களின் காலமும் விரயம் செய்து, குருவின் காலமும் விரயம் செய்து, பிறவிகளையும் விரயம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

தர்மம் எது, தர்ம சாஸ்திரம் எது என்கிற நிலையை உணராத நீங்கள், எப்படி ஒரு சத்குருவை உணர முடியும்.

ஒவ்வொரு பிறவிகளிலும் உங்கள் குரு உங்களின் கை பிடித்து தூக்குவதும், அவரை நீங்கள் எட்டி உதைத்து விட்டுச் செல்வதுமாக இருக்கிறது.

கருவாசலும், நெடு வாசலும் புணரவைத்துக் கொண்டிருக்கின்றது உங்கள் தேகம்.

போதும் இந்த நிலை!!! இந்நிலையிலிருந்து நீங்கள் மாறியே தீரவேண்டும் என்பது இந்த கிழவனின் எண்ணமாகும்.

பரஞ்சோதி வம்சம் எடுக்கவேண்டிய பிரதிக்ஞை

இன்றிலிருந்து அந்த மாபெரும் புண்ணிய க்ஷேத்திரத்திற்கு வருகின்ற நீங்கள் ஒரு பிரதிக்ஞையை எடுக்கவேண்டும்.

நான் என் சுய பிராப்தத்தால் பல கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களைக் கடந்து இந்த மாபெரும் சத்குருவை அடைந்திருக்கிறேன்!

ஆகவே பிறவி என்னும் கடலைக் கடந்து நான் மீண்டும் பிறவாத நிலைக்குச் செல்வேன்.

அதற்கே இந்த குருவின் தரிசனம்!
அதற்கே இந்த குருவின் வாசம்!
அதற்கே இந்த உபதேசம்!
அதற்கே இந்த ஞானம் என்பதை உணர்ந்து, குருவை வணங்கினால், உங்கள் ஒவ்வொருவரின் உயிரும் மேல் நோக்கி எழுச்சி அடைந்து, ஒவ்வொரு வாசல்களும் தானாக திறந்து, நவத்தை அடைந்து, பிரம்மமாய், சிவமாய் சித்த லோகத்தை வந்து அடையும் பிராப்தத்தை பெறுவீர்கள்.

இப்பெரும் பிராப்தம், உபதேசம் கொடுக்கின்ற குருவின் கையிலா, அல்லது சாதகனின் கையிலா? யார் கையில் இருக்கிறது??

துன்பம் வரும்பொழுது குருவைப்பற்றியும், சந்தோஷம் வரும்பொழுது அகம்பாவம் என்ற மடமையைப் பற்றுவதும், இந்த மனித குலத்தின் சூழற்சியாக விளங்குகிறது. இதை நிறுத்தி, சற்று விழிப்படையுங்கள்!

நீங்கள் உணரவேண்டியது உங்களில் ஆத்மமாய் விளங்குகின்ற குருவின் பதிவாகும்!!