குருமகாத்மீயம் – சூத்திரம், சாரம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!
இடைக்காடர் சித்தர் அருளியது!

ஒவ்வொருவருக்கும் உபதேசம் அளிக்கும்பொழுது, குரு தன் உயிரின் ஒரு பகுதியை, ஒவ்வொருவரின் உயிரினுள்ளே பதிக்கிறார்.

ஒரு தாயின் மர்ம ஸ்தானத்திலே தந்தையின் உதிரம் சென்று எவ்வாறு ஒரு கரு பிடிக்கிறதோ, அதே போல குரு தன் உயிரின் பிரதமையை எடுத்து உன்னுள் அழுத்தி சுட்டிக் காட்ட அது உன்னுள்ளே ஆத்ம தேசிகனாய் உன்னத நிலைகளைப் பெறுகிறது.

முக்கண்ணனாம், சிவபட்டம் தரித்த, தென் மலையின் ஆட்சியின் நாயகனாக விளங்குகின்ற அந்த பரஞ்சோதி வம்சத்தில், நவத்தில் தழைத்து, நவத்திற்கே அதிபதியான ருத்திரன் என்ற அற்புத நிலைகளைக் கொண்டவனின் வம்சத்தில், சீடர்களாக வந்த எல்லோரும் ஒரு பண்டிதனாகவே இருக்கிறீர்கள்!

பண்டிதர்கள் எப்போதும், ஆத்ம ஞானம் என்று குருவிடம் கேட்கின்ற சில விஷயங்களை, அவர் கொடுக்கின்ற உபதேசங்களை, சத்சங்கங்களை, குருட்டுத் தனமாக புரிந்து கொண்டு, அதிலே நிபுணத்துவம் பெறாமல், அதையே உண்மை என தனக்குள் உறுதியை ஏற்றுக்கொண்டு, அந்த சாரத்தினுள் இருக்கின்ற சூத்திரத்தை விட்டு, அதிலே தோன்றுகின்ற உங்களின் அப்பொழுது இருக்கின்ற உணர்ச்சிகளின் நிலைக்கு தக்கவாறு உங்களின் வாயிலிருந்து சாரம் வெளிப்பட, வருபவர்கள் சாரத்தை உண்மை என நம்பி, அதிலே நீங்கள் நற்பெயர்கள் பெற்று, அவர்களும் அதை எடுத்துச் செல்ல, சூத்திரம் எது, சாரம் எது என்று உணராத நிலையில் அவர்கள் வாழ்க்கை கடந்து முடிகிறது.

இங்கே அந்த சாரம் மாறும் பொழுது, சூத்திரத்தின் மீது உள்ள நம்பிக்கையை அது பாதிக்கிறது. இவ்வாறு சூத்திரத்தை விட்டு சாரத்தை உபதேசித்தது பண்டிதனின் குற்றமா, இல்லை ஆத்ம ஞானம் வேண்டும் என்று இந்த ஆலயத்தை தேடி வருபவரின் தவறா?

யாருடைய தவறு என்று நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்! இந்த மாபெரும் தவறை ஒரு போதும் இழைக்காதீர்கள்.

சூத்திரம் சரியானால், சாரம் சரியான விதிகளோடு, ஒழுங்குமுறைகளோடு, சரியான புரிதலோடு விளங்கும் என்பதை நீ உணருவாய்.

ஆக நீங்கள் பண்டிதர்களாக இல்லாமல், சிவ பட்டம் தரித்த முக்கண்ணனின் மூன்று ஒளியை நீங்கள் உங்களுக்குள்ளே உணர்ந்து அதிலே நிபுணத்துவம் பெற்றால், சூத்திரமும் அதன் சாரமும் உங்களுக்கு நன்றாக விளங்கும்.