குருமகாத்மீயம் – தனி மனித ஒழுக்கம்

குருமகாத்மீயம் – தனி மனித ஒழுக்கம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

தனிமனித ஒழுக்கம் உடலால், மனதால், எண்ணத்தால் மட்டுமன்றி அவன் உண்ணுகின்ற உணவாலும் தனி மனித ஒழுக்கம் ஏற்பட வேண்டும்.

உணவை உட்கொள்ளும் முன் மகாசக்திக்கு அர்ப்பணித்தல்

ஒரு இல்லற தர்மவதியானவள், அம்மாவாசை முதல் பௌர்ணமி வரை பிரபஞ்சத்தில் இருந்து கொடுக்கப்பட்ட தானியங்களை ஒரு பிடி எடுத்து ஒரு குவளையில் வைத்து, அதனை மகாசக்திக்கு ஆகுதியாக அர்ப்பணிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் அந்த உணவு, சக்தி பெறுகிறது.

பின் பௌர்ணமியிலிருந்து அம்மாவாசை வரை அர்ப்பணிக்கப்பட்ட இந்த தானியத்திலிருந்து, ஒரு பிடி எடுத்து சமைப்பது ஒரு தர்மமாகும்.

உணவு உட்கொள்ளும் அளவு
இந்த உணவை, ஒருவன் ஒரு நாளைக்கு, மூன்று பிடி அளவே உண்ணவேண்டும். இவ்வாறு உண்டு வந்தால் அந்த உணவே அவர்களுக்கு அமிர்தமாக மாறி வருகிறது.

தன் தேவைக்கு மேலாக உட்கொண்டால், அவன் தன்னுடைய ஆன்மாவிற்கு, தன்னுள் இருக்கின்ற அந்த பரத்திற்கு (பரம்பொருளுக்கு) அவன் துரோகி ஆகின்றான்.

ஏனென்றால் இந்த பரம் ஒவ்வொரு தேகத்தினுள்ளும் இத்தனை காலங்கள் வாழ்ந்து, அதிலிருந்து ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றி, இந்த தேகத்தை விட்டு நீங்கி அடுத்த நிலைகளுக்குச் செல்லவேண்டும் என்பதே படைப்பின் ரகசியம்.

அளவிற்கு மீறி உண்டால், அந்த உயிரால் அந்த தேகத்திற்கு கொடுக்கப்பட்ட பிராப்த காலம் வரை இருக்கமுடியாது. அதனால் பிறப்பின் தர்மமும் ஆற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

அன்னதானம்
பிரபஞ்சத்திற்க்கு படைத்த தானியத்திலிருந்து நாம் உண்ணுவதோடு மட்டுமன்றி, மூன்று பிடி உணவு அல்லது அதற்கேற்ற பொற்காசை, அன்னதானமாக ஏதேனும் ஒரு அன்னச்சத்திரங்களுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு செய்தால் பிரபஞ்சத்திற்க்கு ஆகுதி ஆக்கப்பட்டது என்ற நிலைகளிலே சேரும்.

இதை செய்து வந்தால் உங்கள் குலம் செழிக்கும் என்பது இந்த கிழவனின் வாக்கு!!