குருமகாத்மீயம் – திருச்சித்திரை நட்சத்திரத்தின் சிறப்பு

சத்குருவே சரணம்! சந்தோசம்!
குருமகாத்மீயம் – திருச்சித்திரை நட்சத்திரத்தின் சிறப்பு
(இடைக்காடர் சித்தர் அருளியது)

இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நட்சத்திரமும் ஏதேனும் ஒரு மகானை, மகரிஷியை தன் பால் ஈர்க்கவேண்டும் என்று அது அங்கே தவத்தை புரிந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறே நட்சத்திரங்களில் மிக உயர்ந்தவை என்று சொல்லப்படுகின்ற திருவாதிரை ஈசனையும், திருவோணம் விஷ்ணுவையும், மூலம் வாயு புத்திரனையும், ஆயில்யம் ஹரியும், சிவனும் அல்லாது அவரின் புத்திரனான ஹரிஹரனை குறிக்கின்றதாகும்.

நட்சத்திரங்கள் தன் தவத்தின் ஆற்றலால், ஒரு உன்னத உயிரை தன்னுடையதாக தத்தம் செய்து இந்த பூமிக்கு அனுப்புகிறது. இதுவே அவைகளின் தர்மமாகும்.

அப்படி ஏற்கப்பட்ட நட்சத்திரங்களில் ஒன்றுதான் சித்திரை.

மாபெரும் தவத்தின் காரணமாக முக்கண்ணனின் அனுமதியோடு, அந்த நட்சத்திரம் தத்தம் செய்து, முக்கண்ணனை இந்த பூமிக்கு பரிபாலனம் செய்ய அனுப்பியது.

சித்திரை என்ற நட்சத்திரம் தவம் இருந்து இந்த அமிர்த ஜோதியை இப்புவிக்கு அளித்த காரணமாக அது இனி திருச்சித்திரை என்று அழைக்கப்படும்.

இதை இந்த இடைக்காட்டுச் சித்தன் முன்மொழிய, இந்த பரஞ்சோதி வம்சத்தினர் மறுமொழிய, இந்த உலகமே பின்மொழியும்.

இந்த மகாகுரு தோன்றிய திருச்சித்திரை நட்சத்திரத்தில் நல்ல தர்மங்களை செய்து, அவருக்கு மிகச் சிறந்த ஆராதனையெல்லாம் செய்து, பாத நமஸ்காராங்களை செய்து, இனிப்புடன் கூடிய அன்னதானங்களைச் செய்து, இதை பிரசாதமாக உண்டு வந்தால், உங்களின் வினையானது மாறுகிறது.

நீங்கள் குருவை மட்டும் ஆராதிக்கவில்லை, அந்த நட்சத்திரத்தின் அதிபதிகளாய் விளங்குகின்ற, ரிஷிகளையும், ரிஷிபத்தினி தெய்வங்களையும், முனிபுங்கவர்களையும், ஜடாமுனிகளையும் வணங்குகின்றீர்கள்.

அவர்களின் ஆசிகள் நிச்சயம் உங்களுக்கு வேண்டும்.

சத்குருவே சரணம்! சந்தோசம்!
குருமகாத்மியம் – நட்சத்திரங்களின் கடமை
(இடைக்காடர் சித்தர் அருளியது)

விண்ணில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களின் கூட்டு, நவத்தின் தன்மையை பெறுகிறது.

ஒவ்வொரு நட்சத்திரமும் மூன்று கோள்களின் மீது தங்களின் ஆளுமையை ஏற்படுத்திக்கொள்கிறது.

அந்த 27 நட்சத்திரங்கள் சில நியம விதிப்படி, ஒரு கோடி நட்சத்திரங்களுக்கு அதிபதியாக, க்ஷேத்திர பாலகர்களாக இருந்து அவைகளை பாதுகாக்கிறது .

புவியிலே கடலின் அலை எப்படி இருக்கிறதோ, அதே போன்று விண்ணுலகிலே அந்த நட்சத்திரங்களின் அலைகளை உங்களால் காண முடியும்.

பிரம்மனின் படைப்புகள், படைக்கும்பொழுது அந்த படைப்பின் சாரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அவரவர்தம் பிறந்த பிராப்தத்தின் நிலைகளுக்கு ஒத்த அந்த நட்சத்திரத்தை சார்ந்து, குறிப்பிட்ட வம்சத்தில் ஒரு உயிரானது இந்த பூமியில் பரிபாலிக்கப் படுகிறது.

சத்குருவே சரணம்! சந்தோசம்!
குருமகாத்மீயம் – உயிர் நிலைகளில் நட்சத்திரத்தின் வெளிப்பாடு
(இடைக்காடர் சித்தர் அருளியது)

பூமியில் மனிதன் மட்டுமன்றி, இங்கே தோன்றுகின்ற எல்லா உயிர்களும் நட்சத்திரங்களின் அதிர்வலைகளால் ஈர்க்கப்பட்டு, அவைகள் தத்தம் செய்துகொள்கிறது.

ஒருவர் எந்த நட்சத்திரத்தை சார்ந்து இருக்கிறாரோ அவருடைய உயிர் மையங்களிலே அவரின் கருவிலே பிராப்தத்தினுடைய பதிவுகளிலே காணப்படுகிறது.

அந்த உயிரின் பிராப்தம், தான் எந்த கருவிலிருந்து வந்ததோ, எந்த வித்து அந்த கருவறையை அடைந்ததோ, இந்நிலைகளை அனுசரித்து பிராப்தங்களைப் பெறுகிறது.

முதலிலே அது பிறந்தவுடன் அது கிரகங்களின் இயல்பைக் கொண்டு சொன்னாலும் அதற்கு இன்னொரு மறைபொருள் உள்ளது.

சிலர் பிறந்த பிறப்பிலேயே தன்னுடைய பிராப்த வெளிப்பாட்டின் ஒருபகுதியாய் விளங்குகின்ற தாய், தந்தையின் ஊழ்வினை, அந்த உயிரிலே பதிந்திருக்கின்ற அந்த ஊழ்வினையை அனுபவித்து, பிற்காலங்களிலே அவர்கள் எல்லா நிலைகளிலும் உயர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இன்னும் சிலரோ குழந்தைப் பருவங்களிலே செல்வ சீமாட்டிகளாக இருந்து, வயது முடிந்த காலங்களிலே
அபரிமிதமான துன்பத்தை எல்லாம் பெற்று, இறக்க வழியின்றி, இந்த தேகத்தை விட்டு செல்ல வழியும் அறியாமல் சிக்கி, விதியின்பால் வசப்பட்டு, அவர்களின் வாழ்க்கை சொல்ல முடியாத நிலைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

இன்னொரு நிலைப்பாடு, முதலும் இறுதியும் நல்ல நிலைப்பாடாக இருந்து, நடுப்பட்ட காலங்களிலே துன்பத்தை அனுபவித்து, சிறுவயதில் அனுபவித்த இன்பங்களை அறியாத நிலையிலும், வயோதிகத்திலே அறிந்தும் அனுபவிக்காத, நிலைகளில் வாழ்நாள் முழுவது துன்பமே என்ற நிலைகளைச் சொல்லி மாண்டு மடிவதும் இந்த மனித குலத்திலே நாம் காண்கின்றோம்.

இதில் சிறந்ததும் அல்ல, தாழ்ந்ததும் அல்ல.

விகிதாசாரத்தை நோக்கும் பொழுது, குழந்தைப்பருவத்திலும், இளமை பருவத்திலும் எவனொருவன் அதிக துன்பத்தை பெறுகின்றானோ அவனுக்கு விதியிலே இப்பிறவி இறுதி என்பது பொதுவான நிகழ்வுகளாகச் சொன்னாலும் அது பெரும்பாலும் உண்மையாகவே விளங்குகிறது.

மாறாக இடைப்பட்ட காலங்களிலோ அல்லது இறுதி காலங்களிலோ துன்பத்தை அனுபவித்தால், அதன் பதிவுகளால் நிச்சயம் மறுபிறவி எடுத்தே தீரவேண்டும் என்பது திண்ணமாகும்.

ஆகவே சிறு வயதில் படுகின்ற துன்பத்தை சற்றும் பொருட்படுத்தாமல், கடந்து வந்த பாதையும் நோக்கமும் எதுவாகினும், எவ்வளவு துன்பங்கள், வருத்தங்கள், குழப்பங்கள், சஞ்சலங்கள், தோல்விகள் இருந்தாலும் அதை எண்ணி, வருகின்ற காலத்தை விரயம் ஆக்காமல், வருகின்ற சுகமான காலத்தை சுகமென எண்ணி, அதனை யுக்தியாக வைத்து பார்த்தால் அந்த சுகத்தில் உள்ள சுகத்தை நீங்கள் உணர்வீர்கள். இதுவே உங்களின் இயல்பு.

இந்த உண்மையை உணர்பவனே ஞானி ஆகின்றான்