குருமகாத்மீயம் – பரஞ்சோதி வம்சம் ஏன் பிரபஞ்ச நலத்தையே தன் தர்மமாக கருதவேண்டும்?

சத்குருவே சரணம்! சந்தோஷம்!
(இடைக்காடர் சித்தர் அருளியது)


சித்த புருஷர்களுக்கு கொடுக்கப்பட்ட உபதேசமும், உங்களுக்கு கொடுக்கப்பட்ட உபதேசமும் ஒன்றே ஆகும்.

கொடுக்கப்பட்ட நிலையை தன்மாத்திர நிலையாகக் கொண்டு, எப்பொழுதும் அந்த அஷ்டத்திலேயே நிலைத்து, அதிலிருந்து அந்த சூனிய நிலையை, ஏதேனும் ஒரு வழியிலே இந்த உலகத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் வெளிப்படுத்த வேண்டி, அவரவர்கள் ஒரு மார்க்கத்தையும், அவரவர் தம் நிலைகளையும் பற்றி, அந்த நிலைகளில் பீடங்களையும், சித்திரங்களையும் உருவாக்கி, அதில் தன்னுடைய பிரதமைகளை எல்லாம் பதித்து, அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்கு அறிவு என்ற நிலைக்கு வருவதற்குரிய ஆயத்தப் பணிகளை செய்வதற்கே இவை அனைத்தும் உருவாக்கப்பட்டது.

போகரால் உருவாக்கப்பட்ட மாபெரும் பிரதமை, பல்வேறு விதமான நோய்களும், பிணிகளும் போக்கி, பூரண ஏகாந்த நிலையில், பல ஆயிரம் வருடங்கள் நிலைத்து நின்று அருள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தன்னுடைய சுய பிராப்தத்தின் மூலம் உயர்ந்த பிரபஞ்ச அறிவைப் பெற்று, அங்கிருந்து பாலகனை(முருகனின் வடிவம்) உருவாக்கி, அவனுடைய ஆட்சியாய் இருக்கின்ற செங்கோலை உருவாக்கி, அவருக்கு நித்தியமும் ஔஷதங்களை ஒளி பிரதமையோடு உள்ளடக்கி, அது அபிஷேகமாக மனிதனின் முப்பிணியையும் நீக்கவல்ல பிரசாதமாக கொடுக்கப்பட்டது.

இந்த உன்னத மார்க்கத்தை தேர்ந்தெடுத்தவர்கள் இந்த சித்த புருஷர்களாவர்கள்.

நீ எதை தியானித்தாலும், எந்த வழியிலே தியானித்தாலும், உனது இருப்பானது எப்பொழுதும் ஆத்ம இருப்பாகவே இருக்க வேண்டும்.

தேர் ஓட்டுகின்ற சாரதி யாருக்கு தேர் ஓட்டுகிறார் என்பது அவரின் நிலை அல்ல. அவனுடைய கவனம் சிதறாமல் அந்த தேர் ஓட்டுவதிலேயே அவனது பூரண நினைவானது நிலைக்க வேண்டும்.

இந்த பரஞ்சோதி வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு, சுயநலம் என்ற அல்ப நிலைகளானது ஈடேராது.

உங்களின் நிலை இந்த பிரபஞ்சத்தின் நிலைக்கு ஒத்தது.

எல்லோருக்கும் கைப்பொருட்கள் நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டால், உங்களுக்கும் கைப்பொருள் நிறையும்.

ஆத்ம நிலையிலிருந்து நீ எத்தகைய செயலைச் செய்தாலும், அது உனக்கு பயன்படாது! பிறருக்கே பயன்படும்!

இந்த முக்கண்ணன் தனக்கென்று எதைக் கேட்டாலும், அது அவருக்கு அவ்வளவாக சித்திக்காது.

ஆகவேதான் இந்த குருமாரிகளின் மூலமாகவும், சிரத்தை வேதியர்களின் மூலமாகவும் நான் வெளிப்படுவேன் என்கின்ற உறுதிப்பாட்டை அவர் கொண்டுள்ளார்!