குருமகாத்மீயம் – பிரதோஷ சூத்திரம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!
(இடைக்காடர் சித்தர் அருளியது)

பிரதோஷ தினம், நந்திக்கு உகந்த தினமாக கூறப்படுகிறது. இந்த பிரதோஷ காலம், மாதத்தில் வரும் பிரதோஷம் அல்ல, ஒவ்வொரு நாளும் சந்திரன் உதிக்கின்ற மாலை பொழுதிலும், சந்திரன் மறைந்து சூரியன் உதிக்கின்ற காலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் இந்த பிரதோஷ நிகழ்வு ஏற்படுகிறது.

ஆக நந்திக்கு உகந்த இந்த பிரதோஷத்திலே, நந்தியின் இருபெரும் கூம்புகள் எனப்படும், இருபெரும் வாசிகளுக்கு இடையிலே விளங்கும் ஆரதாரத்திலே அழுத்தி நின்று, மாபெரும் வாசி வழியாக, அன்றைய நாளில் ஏற்பட்ட அகம்பாவம், ஆணவம், புகழ், இச்சை, கர்வம் என அனைத்தையும் விடுத்து, ஒரு ஏகாந்த நிலையிலே ஒரு யோக்யவானாக, யோக்யவதியாக நிலைக்க, துயிலில் ஆழ, துயிலவனாய் விளங்குகின்ற அந்த சூன்யத்தில், ஒளியெனும் பரம்பொருள் உன்னகத்தே ஒளிர்ந்திட அந்த அஷ்டத்திலே தூய்மையாக, பூதகனத்திலிருந்து ஒளி கனமாக விளங்குகின்ற அந்த சூழலே, அந்த வேளையே உனது ஆத்ம நிலை. இதற்கு இடற்பாடுகளாய் விளங்குகின்ற எல்லா காரணிகளையும் தொலைக்கின்ற சங்கமம் இந்த பிரதோஷ சங்கமம். 

சந்திரன் உதிக்கின்ற மாலை பொழுதில் ஏற்படுகின்ற  இச்சந்தியிலே, உகாரமெனும் அகங்காரத்தை,  மூச்செனும் இரு கொம்புகளின் வழியாக  அடக்க, அகாரமெனும் ஜோதியானது, பிரம்மம் எனும் சந்திரன் மறைந்து சூரியன் உதிக்கின்ற காலை பிரதோஷ வேளையிலே, ஒளிதாங்கி நிற்கிறது.

இந்த வேளையைத்தான் பிற்கால உலகங்கள் பிரதோஷ சூக்குமத்தை, அதன் சூட்சுமத்தை உணராமல் ஒரு நியமமாக, ஒரு சம்பிரதாயமாக, ஒரு வழக்கமாக மட்டும் கொண்டு, பல்வேறு திரவியங்களைக் கொண்டு, அபிஷேகங்கள் செய்து பிரசாதம் என்னும் அறுசுவையை உண்டு, அதிலே களைத்து, அந்த உண்ட களைப்பில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற மக்களை என்ன சொல்வது!!

ஆகவே இந்த பிரதோஷ வேளையில், ஆருத்ரன் எனும் ருத்ரன், சம்ஹாரமூர்த்தியாய் விளங்குகின்ற ஆக்கினையில், அல்லாதவைகள் அனைத்திற்கும் சம்ஹாரங்களை ஏற்படுத்தி, இந் நிலையில் தூய்மை பெற்றவனாக, மகாசக்திக்கு உகந்தவனாய், உன் குருவிற்கு ஏற்றவனாய் நீ விளங்க வேண்டும்!!

பிரதோஷ வழிபாடுகளை முறைப்படுத்தவேண்டிய காரணிகள்

இந்த கிழவனும் பிரதோஷ வேளைகளில் சிவ வழிபாடுகளையெல்லாம் செய்து மாபெரும் நற்பெயரும், நற்பயனும், நற்கதியும், நல்வரங்களெல்லாம் பெற்றேன். ஆனால் காரியம் எதுவாயினும், காரணத்தை எப்பொழுதும் மறவக்கூடாது. இந்த கிழவன் உரைத்த உரையை, பால்வெளி மண்டலத்திலிருந்து இருபெரும் நிலையான மனிதனின் சுழற்சியும், பூமியின் சுழற்சியும், மையமாய்க் கொண்டு உங்களுக்கு நாம் இந்த நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

தற்பொழுது யோக சூத்திரங்களானது பயில்விக்கும் பொழுது இந்த தட்பத்தை காரணிகளாகக் கொண்டு அதற்கு நாம் ஏற்ற நிலையிலே வரிக்க வேண்டும். ஏனென்றால் நாம் எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கின்றோமோ அத்தகைய நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும். மனிதனின் தன்மைகளுடைய காரணிகளில், தாய் என்கின்ற மண், புவியிலிருக்கின்ற தாய்மண் என்கின்ற நிலைகள் என இருபெரும் நிலைகள் காரணியாகத் திகழ்கிறது. ஆக தற்பொழுது இந்த புவியில் ஏற்பட்டிருக்கின்ற அபரிவிதமான வெப்பத்தின் மாறுபாடுகள், மனித இயக்கத்தின் மாறுபாடுகளாக விளங்குகின்றது.

இந்த பூமியினுடைய வெப்பம், காலை முதல், சந்தி எனும் வேளையில் நிலைக்கின்ற காரணத்தால், மாலை சந்தி வேளையில் அயர்ந்து வருபவனுக்கு, சந்தியான இருபுருவத்தின் நடுவில் இருந்து துஷ்டனை வெளிப்படுத்தாத காரணத்தால், எண்ணத்தில் ஒரு அசைவும், செயலில் ஒரு அசைவும், உடலிலே இருக்கின்ற அந்த இறுக்கத்தை தளர்விப்பதற்காகவும், மேலும் அந்த வெப்பு நிலைகளை உட்கொள்ளமுடியாத, அதனை சகிக்கமுடியாத காரணத்தால், தன்னை இந்நிலையிலிருந்து தனித்துக் கொள்ளவும், போகம் எனும் வழிமுறைகளை காண்கின்றதால், உயிரின் வசமானது வசப்படாத நிலைகள் அவன் துரோகியாக மாறி, உயிரை விரயம் செய்கின்ற நிலைகள் ஏற்படுகிறது.

ஆகவே இந்த மிக முக்கியமான காரணத்திற்கு, இரவெனும் சந்தியிலே  உகாரம் என்கின்ற இரக்கமும், பிரம்மம் என்கின்ற பிரதோஷ சந்தியிலே அகாரம் என்கின்ற பெருக்கமும் ஏற்பட, பெருக்கமும், இரக்கமும் இருபெரும் நிலைகளாக விளங்க, சிந்தையில் இருக்கின்ற கசடுகளையெல்லாம் நன்றாக உகாரமெனும் வாசியிலிருந்து வெளிவிட்டு ஒளிபெற்ற நிலையில், தூய்மையான நிலையில் உங்களின் உறக்கம் எண்ணும் கடமையைச் செய்ய இளைப்பாறும் எனும் நிலையைச் செய்ய, அதுவே ஒரு உன்னத சுகந்தமாகும்.

ஒருமுறை தன் ஆத்மத்தின் ஸ்பரிசத்தை அவன் பெற்றால், எப்பாடுபட்டேனும் அந்த ஆத்மத்தின் ஸ்பரிசத்தை மீண்டும் மீண்டும் பெற முயற்சி செய்வான். இந்நிலைகளைக் கொள்ள அவன் பிராப்தத்தின் படி, எந்த காலத்தில் அவன் அந்நிலைகளை அடையவேண்டுமோ அவன் அதை அடைவது நிச்சயம் என்பதை  நம்மால் வகுத்து கொடுக்கின்ற நிலைகள் அங்கே ஏற்படும்.


குருமகாத்மீயம் – பிரதோஷ வழிபாடுகளை உணர்த்தும் ஆட்கொண்டேசனின் கதை
ஒரு அரசனின் இருபெரும் மந்திரிகள் இருந்தார்கள். ஒருவன் பிரதோஷ வேளையிலே வேசியிடம் செல்ல, மற்றொருவன் சிவ ஆலயத்திற்க்குச் சென்று பிரதோஷ புண்ணிய வேளையெல்லாம் கண்டு களித்துக்கொண்டிருந்தான்.

ஆனால் காணவேண்டிய வேளையில், மாபெரும் வேத விற்பகர்கள் தன்னுடைய நாவிலிருந்து வேதத்தின் சாம்ராஜ்ஜியங்கலையெல்லாம் வெளிப்படுத்த, அந்த பாமரனோ வேசியிடம் சென்ற சக அமைச்சர் எதை செய்து கொண்டிருப்பார் என்கின்ற துஷ்ட எண்ணத்தோடு அவன் மனம் அங்கே நிலைக்க, வேசியிடம் சென்றவனோ அந்த பிரதோஷ புண்ணிய வேளை வரும்பொழுது, ஆலையத்திலே தற்பொழுது எத்தகைய அபிஷேகங்களைச் செய்து கொண்டிருபார்கள், தற்போழுது எந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணமானது அவனுக்கு ஏற்பட, இவ்வாறு இந்த பிரதோஷ வேளையிலே சொல்லப்படுகின்றவையை அந்த ஆராதாரம் என்னும் சந்தியில் நின்று தன்னுடைய எண்ணத்தை அந்த மேலான நிலைகளுக்கு எடுத்து இயம்ப, அங்கே அவனுக்கு காமம் என்னும் நிலை சம்ஹாரமாகி, பிற்காலங்களிலே தேனருவிசித்தன் என்ற திருநாமத்தோடு மாபெரும் சிவனின் பக்தனாய், சிவ நாமம் தரித்தவனாய் விளங்கப்பெற்றான்.

பிற்காலங்களிலே அவனுக்கு ஆட்கொண்டேசர் என்ற திருநாமம் ஏற்பட்டது. விஷ்ணுவிற்கு வாயுபுத்திரரைப் போன்று அந்த பரமேஸ்வரன் என்ற நிலைப்பாட்டிற்கு ஆட்கொண்டேசன் என்ற நிலைகளானது அங்கே உத்திஷ்டமானது.

ஆகவே இதன் மூலம் இந்த சந்தி வேளையிலே உங்கள் எண்ணத்தின் மகத்துவம் எப்பேற்பட்டது என்ற உண்மையை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இந்த சிறு கதையை உங்களுக்குச் சொன்னோம்.

இந்த சந்திவேளையிலே உங்களுக்குள் இருக்கின்ற அந்த துஷ்டனை சந்தியில் நிறுத்தி, சந்தியில் இருந்து அந்த மாபெரும் உபதேசிக்கப்பட்ட உணர்வை, சந்தி வேளையில், சந்தியின் இடத்திலிருந்து அந்த மேலான நிலைகளில் இருந்து உங்களின் துஷ்டனை நினைக்க, அந்த துஷ்டன் மறைந்து நீ கீர்த்தி பெறுவாய்!