குருமகாத்மீயம் – முக்கண்ணன் காக்கின்ற ஸ்ரீவிஷ்ணு

குருமகாத்மீயம் – முக்கண்ணன் காக்கின்ற ஸ்ரீவிஷ்ணு

சத்குருவே சரணம்! சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

 உங்களுள்ளே இந்த ஒளி பிரதமையானது முச்சந்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட க்ஷணப் பொழுதிலிருந்தே, உங்களுடைய விதியானது ஜனனத்தின் பொழுது ஏற்படுகின்ற உங்களின் இயல்பு, ராசி நட்சத்திர கூட்டங்களின், அலைவரிசைகள், அந்த விதிகள் சற்று நீங்கி இருக்கின்ற நிலைகள் ஏற்பட்டுள்ளது.

பிறப்பால் எத்தகைய கோத்திரங்களிலும், எத்தகைய குலத்திலும், எந்த சமயத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், எப்பொழுது இந்த மாபெரும் உன்னத பிரதமையை உங்களுக்குள்ளே தரிக்கிறார்களோ, தரித்த மாத்திரத்தில், நீங்கள் ஒளியினுடைய வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவீர்கள்.

ஆக இந்த ஒளியினுடைய வம்சத்திற்குள் செல்லும் பொழுது, இந்த ஒளியினுடைய வம்சத்திற்கு உரித்தான சக்திகள் உங்களை அதன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் செல்கிறது.

அவ்வாறு சக்திகளானது இந்த கட்டுபாட்டிற்குள் எடுத்துச் செல்ல, உங்களுடைய  சுய தர்மத்தில் நீங்கள் நிலைப்பதற்காக, எல்லா விதமான சூழ்நிலைகளும் அங்கே உருவாக்கிக் கொடுக்கப் படுகிறது.

ஒரு ஆற்றினுடைய நீரானது சரியான திசையிலே வந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த திசையை நீங்கள் சரியாக உணராமல், நீங்களாக அந்த மடையை மாற்றி துன்பத்தை விளைவித்துக் கொள்கிறீர்கள்.

அப்படி மடை மாற்றாத நிலைகளிலே நீங்கள் இருந்தால், உங்களுடைய வம்சமும், கீர்த்தியும், உயிரும், ஜீவனும் இந்த பரஞ்சோதியால் பாதுகாக்கப்படுகிறது.

உங்களின் உயிர்நிலைகளுக்குத் தக்கவாறு, உங்களின் சகதர்மச்சாரிணி, உங்களுடைய உயிர் நிலைகளுக்குத் தக்கவாறு உங்கள் கருவில் உதிக்கின்ற உதிரங்கள் என அனைத்தும் அந்நிலைகளைச் சார்ந்தே அமைகிறது. 

இந்நிலைகளுக்கு  சற்றும் ஒவ்வாதவராக, குரு வம்சதைச் சாராத ஒரு ஆடவனையோ, பெண்ணையோ நீங்கள் திருமணமோ அல்லது சுப காரியங்களிலே ஏற்படுத்திக்கொண்டால் அது உங்களின் உயிர் பிராப்தத்திற்க்கு சற்றும் பொருந்தாத நிலைகள் ஏற்படுகின்ற காரணத்தால், உங்களுக்கு துன்பத்தையே விளைவிக்கின்றது.

ஆனால் உங்களுடைய உயிர் பிராப்தத்திற்க்கு ஒத்த நிலைகளிலே ஒரு தெய்வீகத் துணையை நீங்கள் கொள்ளும்பொழுது, அந்த தெய்வீகத்தினுடைய இருவரின் இருபெரும் நிலைகளை அங்கே இந்த முக்கண்ணனானவன் பாதுகாக்கின்ற நிலைகள் அமைகிறது. 

உங்களுக்கு வருகின்ற அனைத்து துயரங்களும், துன்பங்களும், கஷ்டங்களும், உங்களினுடைய சுற்றமும், சூழலும், உயிரும், இந்த முக்கண்ணனினுடைய ஒளியின் நிலைகளால், சக்தியினுடைய நிலைகளால் அது மாற்றப்படுகிறது.

எப்பொழுது நீங்கள் குருமாரியாக (மெய் உணர்வாளர்கள்) மாறுகிறீர்களோ, அப்பொழுதே உங்களின் தலை எழுத்தும் அங்கே மாறுகிறது. விதி மாற்றத்திற்கு உட்படுகிறது.

விதியை மதியால் வெல்லுகின்ற நிலை, உங்களை பாதுகாக்கின்ற, உங்களை பரிபாலனம் செய்கின்ற நிலைகளாக மாறுகிறது.

குருமாரியாகிய அந்த க்ஷணம் முதல், உங்களை சுற்றி இருக்கின்ற அனைத்தும் வேற்று கிரக வாசிகளாகவும், நீங்கள் வேற்று கிரக வாசிகளாகவும் மாறுகிறீர்கள்.

வேறுபட்ட நிலைகளிலே நீங்கள் இருக்கும்பொழுது, இந்த ஸ்தூல தேகம், உயிரின் பிராப்தத்தினுடைய நிலைகளுக்குத் தக்கவாறு சூழல்களை ஏற்படுத்தி, அது அந்த பிராப்தம் நிறைவேறும் வரை இந்த உடலைப் பாதுகாக்கின்ற, இந்த உடலை பரிணமிக்கின்ற நிலை அங்கே ஏற்படுகின்றது.

ஆகவே இந்த பரிபாலனத்திற்கு உரிய தெய்வமான மகா விஷ்ணுவை அவர்கள் சொல்லுகிறார்கள்.

எப்படி ஒரு அடுப்பானது எரியாவிடின், அதனை தூண்ட காற்றினுடைய உந்துதல் அங்கே தேவைப்படுகிறதோ, அதேபோன்று, இந்த ஒளிப் பிரதமை என்று சொல்லப்படுகின்ற ஒளியினுடைய சக்தியானது அபிவிரிக்க, இரு பெரும் வாசிகள் அங்கே தூண்டப்படுகிறது.

இரு பெரும் வாசிகள் புருவ மையத்தை தூண்டப்பட, ஒளியினுடைய பிரவாகம், ஒளியினுடைய சுழற்சி முழுமையடைந்து, மென்மேலும் அது விரிவடைந்து கொண்டே செல்கிறது.

ஆகவே, முக்கண்ணனின் பிரம்மன் என்கின்ற படைக்கும் நிலை, விஷ்ணு என்கின்ற காக்கும் நிலைகளானது, என உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.