குருமாகாத்மீயம்: நிகுல வம்சத்தின் நிலைகளை மீண்டும் நினைவு படுத்துதல்

சத்குருவே சரணம்!!


(இடைக்காடர் சித்தர் அருளியது!)

இந்த வனாந்திரத்தில் சுற்றித் திரிவதைப்போல், இந்த சமுதாயத்தில் திரிந்து கொண்டிருக்கின்ற எத்தனையோ அபயக்குரலை எழுப்புகின்ற உயிர்களின் உயர்வுக்காக மட்டுமே இந்த நிகுல வம்சம் இருக்கின்றது.

அவர்களை நீங்கள் பாதுகாக்கவில்லையென்றால், அவர்களுக்கு முக்தியோ, சித்தியோ எதுவும் இல்லாத நிலைகளில், பல பிறவி எடுத்து, பிறப்பும் இறப்பும் என்ற நிலைகளில் மாண்டு விடுவார்கள்.

சிறிதளவு அந்த பாவ புண்ணிய கர்மங்களுக்கு ஏற்றாற்போல், சற்று உயர்ந்த தாழ்ந்த குடும்பத்தில் பிறந்து, ஆனால் வாழ்விலே பூரண நிம்மதி இல்லாத நிலை, அவர்களையும் அறியாமல் அதையே தேடிக்கொண்டே இருக்கின்ற நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்.

இந்த நிகுல வம்சத்தில் தோன்றிய, இந்த உயர் கூடாரத்தில் தஞ்சம் புகும் அனைவரும், ஏற்கனவே தஞ்சம் புகுந்தவர்கள், தஞ்சம் புகுகின்ற இடம் அறியாமல் தவிக்கின்ற உத்தமர்களுக்கு, இந்த உயர்ந்த கூடாரத்தைக் காண்பித்துக் கொடுத்து, அவர்களையும் தஞ்சம் புகச் செய்வதே உங்களின் மாபெரும் நிலையாகும்.

அதனால் தான் இந்த நிகுல வம்சம் உயர்ந்தால் அன்றி, பெரும் பெயரைப் பெற்றால் அன்றி, இந்த வம்சத்தின் ஒவ்வொருவரும் ஞான, தான, கர்ம தர்மத்தை சரியாக பின்பற்றாதவரை, இந்த ஜகத்தில் இருக்கின்ற எத்தனையோ உயிர்களின் பாடுகளைத் துடைக்கமுடியாத நிலைகள் ஏற்படும்.

உங்களால் இங்கு ஏற்படுகின்ற அதர்மத்தை மாற்ற இயலாது. ஆனால் அதிலே சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்ற உத்தமர்களை, பெரும்பேறு அடையச் செய்வதற்காகவும், அனைவரையும் உங்கள் முதுகிலே எடுத்துச் சென்று, அவரவர்களுடைய இடத்தை அவரவருக்கு உரைத்து, அந்த இடத்திலே, உடனிருந்து அவர்களை பயணிக்கச் செய்யவல்ல சாரதிகளாக நீங்கள் இருக்கவேண்டும்.

எத்தனையோ மகாத்மியங்களில் உங்களுக்கு உங்களின் நிலைகளை பல்வேறு உவமானங்களோடு சொல்லிக்கொண்டே இருப்பதன் நோக்கம், உங்களில் பிறப்பு, அப்பேற்பட்ட பிறப்பு என்ற காரணமே ஆகும்.

இந்த நிகுல வம்சத்தின் மகாகுரு வாக்கியத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற, முக்கண்ணனின் பிரதிநிதிகளாக, அவரின் பிரதமைகளாக, அவரின் ஜோதி சொரூபர்களாக ஒளிர்கின்ற நீங்கள், இந்த ஜோதி சொரூபத்தைத் தன்னுள் பதித்த, ஈர்க்கப்பட்ட காரணத்தால், உங்களுக்கு இந்த குரு கீதை, இந்த குரு மகாத்மீயம் உங்களுக்கே முதலாவதாக சொல்லப்படுகிறது,

நீங்களாக வழிய வந்து கேட்டாலும் சரி, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நீங்கள் இந்த முக்கண்ணனின் பிரதமையை, இந்த ஜோதி சொரூபத்தைத் தாங்கி இருக்கின்ற காரணத்தால், இந்த உண்மையை நாங்கள் உணருகின்றோம், ஆனால் தாங்கி இருக்கின்றோம் என்று சிறிதும் அந்த நிலையை அறியாது, இன்னும் பிறரினுடைய சிறு சொல்லிற்காக ஏங்கிக் கதறுவது, உங்களையே நீங்கள் வருத்திக் கொள்ளும் நிலைகளில் தான் நீங்கள் பயணிக்கின்றீர்களே தவிர, உங்களிடம் பொருத்தப்பட்டிருக்கின்ற அந்த ஜோதி என்கின்ற மகாபிரதமையை நீங்கள் ஒரு போதும் உணர்ந்ததும் கிடையாது, உணரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதும் கிடையாது.

ஆனால் முக்கண்ணனின் தலைவிதியோ, உங்களைக் கொண்டுதான், வாடி தவிக்கின்ற எத்தனையோ கோடிக்கணக்காண உயிர்களையெல்லாம் ஸம்ரக்ஷிக்கவல்ல ஆற்றல் பொருந்திய நீங்கள், ஆற்றலை அறியாத காரணத்தினால், சிறிதளவு துன்பம் வந்தாலும் ஏற்க முடியாமல் உயிரை நீத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திற்குச் சென்றுவிடுகிறீர்கள்.

ஆகவே இந்த நிகுல வம்சம் மேலோங்கி செயல்படவேண்டும். ஏனென்றால் இந்த நிகுல வம்சத்தின் சமன்பாடே இந்த சமுதாயத்தின் சமன்பாடு, அதுவே இந்த பூமியின் சமன்பாடுமாகும். இவ்வாறே வையக நிலைகளின் சமன்பாடுகள் ஏற்படவேண்டும்.

ஆகவே இந்த தர்மம், கர்மத்தை சரியாக பற்றி, உங்களின் வாழ்நாளிலே சரியாக பயின்று, சமநிலையோடு இருந்து, உங்களோடு பயணிக்கின்ற சக உதிரங்களையும் உயர்த்தி, தத்தமது இருப்பு நிலையை இருக்கச் செய்து, நீங்கள் இந்த மண்ணை விட்டுச் செல்லும் பொழுது ஒரு மிகச் சிறந்த சாரதியாக இந்த சித்தலோகத்திலே உங்களுக்கென்று பொதிக்கப்பட்டிருக்கின்ற சிம்மாசனத்திலே அமர, இந்த சித்தலோக ஜமிக்கைகள் தங்களின் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றது.