குரு மகாத்மீயம்-குருதவபீட பிரவேச சிறப்புகள்

குரு மகாத்மீயம்-குருதவபீட பிரவேச சிறப்புகள்

(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)

எவனொருவன் தன்னுடைய நெற்றி கண்ணையும் கடந்து, உச்சி எனும் பேழையிலே மாபெரும் சஹஸ்ரம் பொருந்திய ஆனந்த நர்த்தவம் நடக்கின்ற அந்த மாபெரும் புண்ணிய இடத்திலே வீற்றிருக்க எண்ணுகிறானோ , வீற்று இருக்கிறானோ, அனைத்திற்கும் ஆதியாய் விளங்குகின்ற சிவத்தின் மீது நாட்டம் கொள்கிறானோ, அவர்கள் அனைவரும் விண் தத்துவத்தை ஈர்க்கப் பெற்றவர்களாக கொள்ளப்படுவர்.

பஞ்சபூத தத்துவ நிலை

விண் – சிவன் , கந்தன், (ஏகாந்தத்தில் விண் நிலை, போர் புரியும்பொழுது அக்கினி நிலை), புத்தர்.

காற்று/வாயு – மஹாவிஷ்ணுவின் மீது ஈர்க்கப்பெற்று, அவரை வணங்கும் உன்னத நிலையில் இருப்பார்கள். இந்நிலையில் ஏசுவும் இருப்பதால் எதையும் மன்னிக்கும் தன்மை கொண்டுள்ளார்.

அக்கினி / நெருப்பு- போர் புரிகின்ற வேலவன், எல்லை தெய்வங்கள், பிரத்யங்காரா தேவி, அல்லா போன்ற தெய்வங்களை யுத்த நிலைகளில் உள்ளவர்கள் வணங்குவார்கள்.

நீர் – மாரியம்மன், சூலினி அம்மன் போன்ற சக்திகளை (பெண் தெய்வங்கள்), வணங்குபவர்கள், ஏதேனும் ஒரு குறைக்காகவும், குறையை நிவர்த்தி செய்வதற்காகவும், ஒரு எண்ணத்தை சரி செய்வதற்காகவும், உணர்ச்சிகள் சம்மந்தப்பட்ட நிலைகளையும் மாற்றிக் கொள்வதற்காகவும், தன்னை கைப்பற்றிய மணாளன் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கவேண்டும், தனது குழந்தைகள் அனைத்து துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்ற அபிலாஷைகளையும் வைத்துக்கொண்டு வணங்கிச் செல்வார்கள்.

நிலம் / மண் – விக்னேஸ்வரன் தடைகளை நீக்குகின்ற நிலைகள், காரியத்தில் வெற்றி பெறவேண்டும், நல்லவைகளை பெறவேண்டும் என்கின்ற நிலைகள்.

முக்கண்ணன் பரஞ்சோதியின் தத்துவ நிலை

இந்த ஐந்து நிலைகளில், உங்கள் உடல் எந்த நிலைப்பாட்டில் நிற்கிறதோ, அதற்கு தக்கவாறு, இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற சக்திகள் உங்களை ஈர்க்கிறது, இந்த உடல் அந்த பிரபஞ்ச சக்திகளை ஈர்க்கிறது.

இந்த விண் தத்துவம் என்பதோ உயர்ந்த தத்துவம்.

ஏனென்றால் எல்லா கோள்களின் அதிபதி சூரியன். சூரியனின் அதிதேவதை சிவம்.

இதன் வரிசையிலே தான் அடைந்து, நிலைத்து நிற்கின்ற விண் தத்துவத்தை, தான் அடைவதோடு மட்டும் இன்றி, ஒரு மாபெரும் வம்சத்திற்கு அதிபதியாய் விளங்குகின்ற சிவபட்டம் தரித்த இந்த முக்கண்ணனும், விண் தத்துவத்திற்கு உரியவனாகிறான்.

அருணகிரிநாதர், ரமணர் இவர்கள் விண் தத்துவத்திற்கு உரியவர்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு உபதேசமாக இந்த விண் தத்துவத்தை அளிக்கவில்லை.

முக்கண்ணனோ இந்த விண் தத்துவத்தை நெறிமுறைகளாக, விதி முறைகளாக உங்களுக்கு உபதேசமாக அளிக்கின்ற உத்தம பேரும், நிலைகளும் பெற்றிருக்கின்றான்.

சத் குருவே சரணம் ! சந்தோசம் !

குரு மகாத்மீயம்
(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)

 

குருதவ பீடத்தின் விண் தத்துவ நிலை

இந்த உண்மையான விண் தத்துவத்தை உணர்ந்த சிவபட்டம் தரித்த முக்கண்ணன், முக்கண்ணனுக்கென்று உருவாக்கப்பட்ட இந்த குடில், இந்த குடிலிலே வீற்றிருக்கச் செல்லுகின்ற இந்த சிவபட்டம் தரித்த முக்கண்ணனின், ஒரு உன்னதமான நாளிலே ஏற்படுகின்ற பெயர்ச்சியாகும்.

அன்று ஆதவன் என்று சொல்லப்படுகின்ற இந்த சூரியனினுடைய பலம் பெற்ற நாளாக அந்த நாள் விளங்குகின்றது.

பல்வேறு விதமான சக்தி ஓட்டங்களும், சர ஓட்டங்களும், உயிர் ஓட்டங்களும் அங்கே ஸ்தாபிக்கப்படுகிறது.

மகான்கள் வாழ்ந்த பூமி, வாழ்ந்த ஸ்தலம், வாழ்ந்த இல்லம், இவர்கள் உடுத்துகின்ற உடுப்புகள், இவர்கள் பயன்படுத்துகின்ற ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தன்மைகள் ஏற்படுகிறது. அவற்றின் பிரதிபலிப்பு, அதன் தன்மை அந்த சூழல்களிலும் ஏற்படுகிறது.

ஒரு மிக உயர்ந்த நாளிலே செல்லுகின்ற இந்த பெயர்ச்சி, இந்த புது விழாவானது அந்த பகுதிகளிலே, அந்த முகட்டினுடைய உச்சியிலே வாழுகின்ற பல ஆயிர மதிப்புமிக்க உன்னத சித்த புருஷர்களும், மாபெரும் சக்தியும், மாபெரும் உயர்ந்த நிலைகளும் இந்த நல்ல நிகழ்வை வாழ்த்த, சூக்கும – அதி சூக்கும நிலைகளிலே உயர்ந்த வாழ்த்துக்களை எல்லாம் பெற்று, ஏகாந்தத்தில் பயனிக்கவிருக்கின்ற இந்த வைபவம், ஒரு உன்னத வைபவமாக, போற்றுதலுக்குரிய வைபவமாக இருக்கின்றது.

அதற்கு முன்னரே சிற்சில நன்மையான சூழ்நிலைகள் ஏற்படவேண்டும் என்பது, முக்கண்ணனினுடைய திருவுள்ளமாகும்.

இருப்பினும் அதற்குரிய முயற்சிகள், கால சூழல்கள் நன்றாக அரங்கேறிவருகிறது.

காரணம், காரியம்

எதுவும் எதோடும் தொடர்புடையதல்ல. எல்லா நிகழ்வுகளும் தனித்தனியாக பார்க்கவேண்டியது.

காரியத்தைக் கொள்ளாமல் காரணத்தைப் பற்றிச் சென்றால் எப்பொழுதும் நன்மையாகும்.

இந்த விண் தத்துவத்திலும், காற்று தத்துவத்திலும் இருப்பவர்கள் காரியத்தை நோக்கிச் செல்லமாட்டார்கள்.

உயர்ந்த தத்துவத்தில் இருப்பவர்கள், நடப்பதற்கான காரணம் என்ன என்கின்ற சித்தாந்தங்களை மட்டுமே அவர்கள் அறிய முற்படுவார்கள்.

அன்றாட வாழ்க்கையிலே,காரியத்திற்கு சென்றீர்களானால், மனம் குழம்பி, அறிவு குழம்பி, நீங்கள் பித்தர்களை போன்றே அலைய வேண்டியிருக்கும். அனைத்திற்கும் காரணத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.

ஒரு சரியான ஆத்ம சாதகனானவன் காரணத்தை மட்டுமே அறிந்துசென்றால், அவன் எப்பொழுதும் தன்னுடைய மேன்மை நிஷ்டையிலே திகழப் பெறுவான்.

சத் குருவே சரணம் ! சந்தோசம் !

குரு மகாத்மீயம்
(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)

குருவின் கட்டளை

ஒரு உன்னதமான வைபவத்திற்கு, ஒரு உன்னதமான ஸ்தல மாற்றத்திற்கு செல்லுகின்ற நிலைப்பாடு, ஒரு வம்சத்தினுடைய உயர்வுக்குரிய நிலைப்பாடாகும்!

ஒரு அரசன் என்றால் ஒரு அரண்மனை இருக்கவேண்டும்!

ஒரு காவலன் என்றால் அவன் கையிலே ஆயுதங்கள் இருக்கவேண்டும்!

அரசன் ஒரு குடிசையிலே வாழ்வது அவன் வடக்கிருத்தலுக்கு சமமாகும்.

அந்த வம்சம் ஆண்ட பூமியானது சுபிட்சம் பெறாது!

ஒரு காவலன் கையிலே ஆயுதத்தை ஏந்துவதை விட்டு, பழங்களை ஏந்தினால், எதிரிகளுக்கு பழம் கொடுப்பானா??

அதேபோல, ஒரு அரசன் என்றால் அதிகாரத்தை தாங்கவேண்டும்.

அதிகாரம் என்றால் அந்த கட்டளையை தாங்கவேண்டும்! கட்டளை என்றால், அந்த விண் தத்துவத்தை தாங்கி இருக்கவேண்டும்!

ஆகவே சிவபட்டம் தரித்த இந்த முக்கண்ணனும் ஒரு அரசனாவான்!!

அந்த அரசனுக்கு உரிய நிலை ஒரு அரண்மனை என்கின்ற ஒரு அமைப்பு!

இந்த அமைப்பிலே, இந்த அரண்மனைக்குள் செல்லுகின்ற அரசன், இந்த அரசனின் வழி வருகின்ற அரசனின் மக்களாய் விளங்குகின்ற நிகுல வம்சம், தன் அரசனைப் போன்று எப்பொழுதும் விண் தத்துவத்திலேயே இருந்து, உங்களின் பிராப்த, பிராராப்த கர்மங்களையும் சரிவரச் செய்து, உங்களின் எண்ணத்தை அங்கே சிதைக்காமல், நீங்கள் மேன்மை பெறவேண்டும் என்பதே இந்த சித்தலோகத்தில் இருக்கின்ற மகா ஜமிக்கைகளினுடைய நல் எண்ணங்களாகும்.

விருட்சங்களில் குடியிருக்கும் உத்தமர்கள்

விருட்சங்கள் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் நல்ல விருட்சங்களிலே உத்தமர்கள் வந்து குடிகொள்வார்கள்.

பிரம்ம முகூர்த்தத்திலே, நல் உத்தமர்கள் தங்களின் பிராணனை இந்த காற்றிலே கலக்கச் செய்வார்கள்.

அவ்வாறு கலக்கின்ற இந்த பிராணனானது, நல் ஏற்றத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற பிராணனாக அது விளங்கும்.

ஒரு மனிதனின் தோற்றமும், உயர்வும், வளர்ச்சியும், இறப்பும் ஒரு விருட்சத்தை போன்றதாகிறது.

இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றே ஆகும்.

ஆகவே அப்பேற்பட்ட நல் விருட்சங்களை குருவின் அரண்மனையைச் சுற்றி ஏற்படுத்தி, அதிலே பல சூக்குமதாரிகளையும், சூத்திரதாரிகளையும், அந்த விருட்சத்திலே ஸ்தாபிக்க செய்து, அவர்களுடைய திக்குகளையெல்லாம் உங்களுக்கு வழங்கி, நீங்கள் இன்னும் மேன்மேலும் உயர்வு நிலை ஏற்படுத்திக்கொள்ள, இந்த சித்த லோக மகா ஜமிக்கைகள் தங்களின் நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது!!