குருமகாத்மீயம் – சுக்கிர கிரகம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!
குருமகாத்மீயம் – சுக்கிர லோகத்தின் கிரின்னியர்கள்
(இடைக்காடர் சித்தர் அருளியது)*

பரஞ்சோதியின் விருட்சங்களை இந்த சித்த லோகத்து ஜமிக்கைகள் வாழ்த்துகிறது.

அழகு ததும்பிய சுக்கிரனின் ஒளி தீட்சண்யமானது, பொன்னிறம் அல்ல, வெண்ணிறமான ஆற்றலை இந்த பூமிக்கு செலுத்தவல்லது.

பொன்னிறமான வெண்மையிலே, மக்களினுடைய ஸ்தூல கண்களிலிருந்து பார்க்கும் பொழுது, சிறிதளவு இருள் கலந்த நிலையில் இருப்பது போன்றும், சிலருடைய ஸ்தூல கண்களுக்கு நீல நிறம் போர்த்திய, அல்லது நீல நிறத்தினுடைய சிறிதளவு தன்மை கொண்ட வெண்ணிறமாக காட்சியளிக்கின்றது.

சுக்கிர லோகத்தில், அசுர குணம் படைத்த கிரின்னியர்களும், கிரின்னிகளும், தேவ குணம் படைத்த கிரின்னியர்களும், கிரின்னிகளும் இருக்கிறார்கள்.

அசுர குணம் படைத்த கிரின்னியர்கள் அதிகமாக ஆண் இனத்தைச் சார்ந்தவராக இருப்பார்கள். அவர்கள் கருத்த நிறம் படைத்தவர்களாக காட்சி அளிப்பார்.

அதிகமான பெண் இனத்தைக் கொண்டவர்கள், தேவ குணம் படைத்த கிரின்னியர்களாக இருப்பார்கள்.

அவர்கள் வெண்மை நிறம் படைத்தவர்களாக, அதிலும் சிலர் பொன்னிறம் படைத்தவர்களாக இருப்பார்.

அசுர கிரின்னியர்களுக்கு, அஷ்டம் அதாவது அவர்களின் தலை 3 அங்குலத்திற்கு புடைத்து, சிவந்த நிறத்தில், காண்பதற்கு லிங்கத்தை கவற்றியது(தலை கீழாக) போல இருக்கும்.

தேவ கிரின்னியர்களுக்கு, நாசியானது புடைத்து, துருத்தி நிற்கின்ற நிலைகளில் இருந்தாலும், அவர்கள் காண்பதற்கு அழகிய சொரூபங்களைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

சுக்கிர லோகத்து கிரின்னியர்களின் ஆற்றல்

சுக்கிர உலகில் இருக்கின்ற அனைவருக்கும் எப்பேற்பட்ட உருவங்களையும் தரிக்கின்ற வல்லமை இருக்கின்றது. ஆனால் முடிந்தவரை அவர்கள் தன்னுடைய தேகம் கொண்டு எச்செயலும் செய்வதில்லை.

அவர்கள் உங்களினுடைய சதைகளில் இருக்கின்ற தோல்களில் உள்ள துவாரத்தின் வழியாக, மனமாக உள்ளே பிரவேசித்து, அதனை ஆட்கொண்டு, குடிகெடுக்கும் நிலையினையும், எண்ணத்தையும் உங்களுக்குளே ஏற்படுத்துவார்கள்.

சற்று நலிந்த சுபாவமும், எண்ணத்திலே தூய்மை இல்லாதவர்களையும் இந்த கிரின்னியர்கள் ஆட்கொண்டு, எதிர்மறையான வினைகளைச் செய்வார்கள்.

மனிதனின் மனதில் எவ்வளவு எதிர்மறையான நிலைகள் இருக்கிறதோ, அந்த அளவிற்கு கிரின்னியர்களின் நிலைப்பாடானது நிலைத்து நிற்கும்.

இந்த அசுர, தேவ உலகத்தைச் சார்ந்த கிரின்னியர்களும், தன்னுடைய திருமேனியிலிருந்து மிகவும் மயக்கவல்ல, கவரவல்ல, தன்னிலையை மறக்கச் செய்கின்ற அளவிற்கு, மாபெரும் சுகந்தத்தைத் தனது தேகத்திலிருந்து வெளிப்படுத்துவார்கள்.

இவர்கள் எப்பொழுதும் புகையாகவோ, புகையைப் போன்று நெளிந்தும் வளைந்தும் செல்லுகின்ற நிலைகளைப் பெற்றவர்களாவார்கள்.

மனித ரோமத்தின் சுற்றளவில் லட்சத்தின் ஒரு பங்காக இவர்களின் சூக்கும சஞ்சாரம் ஏற்படுகிறது. இத்தகையை நுண்ணிய தன்மைகளைப் பெற்றவர்களை உங்களால் ஒரு போதும் தடுத்து நிறுத்த இயலாது.

பரஞ்சோதி வம்சத்தினரின் மாறுபட்ட நிலை

மனதினுள்ளே எதிர்மறை நிலையில், காமம், குரோதம், பிறரின் குடி கெடுக்கின்ற நிலை, பிறரின் பொருளாதாரத்தை அபகரிக்கின்ற நிலை, பிறரின் மனைவியை தன்மைனையாக பாவிக்கின்ற நிலை, குரு பத்தினியை தன் பத்தினியாக பாவிக்கின்ற சொல்ல இயலாத, தார்மீகமற்ற இழிவான கீழ்த்தரமான செயல்களைச்  செய்வதற்கு, மனதினுள்ளே அசைவு ஏற்பட்டால், காலம் சந்தர்ப்ப சூழல் அமையும் பொழுது அதை உங்களுக்குள்ளே இருந்து அசுர கிரின்னியர்கள் செயல்படுத்துவார்கள்.

பரஞ்சோதி வம்சத்தினருக்கு, ஒளி பிரதமையை முச்சந்தியில் நிறுத்தி அங்கே பிரவாகமாக நிற்கின்ற தேவ கிரின்னியர்கள், அசுர கிரின்னியர்களை உள்ளே புக அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் நீங்கள் உங்களின் மடையை மாற்றிக் கொண்டால் இம்மடையினுடைய மாற்றமும் மாறியே செல்லும்.

ஒளி படைத்த நிலையிலே குருமாரிகளாக விளங்கும் நீங்கள், அந்த தேவ கிரின்னியர்களின் பிரவாகத்தை நன்றாக நிலைபெறச் செய்ய, மாபெரும் நிலைகளுக்கு அது உங்களை உயர்த்திச் செல்ல, மாபெரும் தோற்றங்கள் அங்கே உருவாகிறது.

மனிதனின் சூக்கும சஞ்சாரத்தில் சுக்கிரனின் நிலை

பாதாள உலக நிலைப்பாடாக இருந்தாலும், விண்ணுலக நிலைப்பாடாக இருந்தாலும், இந்த பூமியினுடைய மேற்பரப்பில், உங்கள் அஷ்டம் அதாவது உங்களின் உச்சியின் மேல் உள்ள எல்லா சக்திகளும், வேற்று கிரக சக்திகள் என்றும், அது அனைத்தும் இந்த சுக்கிர லோகத்தையே சார்ந்திருக்கின்றது என்ற நிலைகளே ஆகும்.

உங்களுடைய சூக்கும சஞ்சாரங்களில், நீங்கள் வியாபிப்பதற்கு, சுக்கிர லோகத்து கிரின்னியர்களின் அனுமதியின்றி பிரபஞ்சத்திலிருந்தும், பாதாள உலகத்திலிருந்தும் எத்தகைய சக்தியும் ஈர்க்க இயலாது.

ஆகவே அஷ்டத்திலே நிலைத்து, நவத்திலே தழைத்து, நவத்திர்க்கும் பிரம்மத்திற்கும் இடையிலே உங்களின் சஞ்சாரத்தை ஏற்படுத்துவதற்கு, இந்த சுக்கிரலோகத்தில் வாழுகின்ற கிரின்னியர்களே சுற்றுச் சூழல்களை உருவாக்குவார்கள்.

அசுர கிரின்னியர்களின் தன்மை

கிரின்னியர்களை ஆண் பூதங்களகவும், கிரின்னிகளை பெண் பூதங்களாகவும் சொல்லப் படுவதுண்டு. பூதங்கள் என்றால் காண்பதற்கு அருவருக்கத் தக்கவர்கள் அல்ல. இவர்கள் அழகு பதுமைகள்.

இவர்களின் கையில் இருக்கின்ற அஸ்திரமானது திடத்தன்மை கொண்ட அஸ்திரங்கள் அல்ல. மதி மயக்கும் இந்த தேகத்திலிருந்து வெளிப்படுகின்ற கந்தர்வ சக்திகளே இவர்களின் அஸ்திரம். இவர்கள் மாபெரும் பராக்கிரமசாலிகள்.

இவர்களின் நிலைப்பாடானது ஏற்றத்தையும், இரக்கத்தையும் அளிக்கவல்லது. நடுநிலமையான எண்ணங்கள் சற்று குறைவாக இருப்பதால் சந்தோஷத்திலே அள்ளித் தெளிப்பதும், தங்களினுடைய மனதிற்கு மாறாக இருப்பவரை அழிக்கும் எண்ணங்களை கொண்டவர்கள்.

அசுர கிரின்னியர்கள் இக்காலத்தில் அதிகமாக இருக்கும் காரணத்தால், அனைவருள்ளும் அகம்பாவம் தலைக்கேறி இருக்கிறது.

அசுர கிரின்னியர்களால் பூமியில் மனிதனுள் ஏற்படும் அசைவு

நல்ல நண்பனாக ஒருவருக்கு நாம் நன்மையைச் சொன்னாலும், அவர்களுக்குளே, இருக்கின்ற எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கின்ற அற்புதமான கடமையைச் செய்பவர்கள் இவர்கள்!!

நன்மையைச் சொல்ல சென்றாலும், தகாத வார்த்தையில் உங்களை உபதேசிப்பதால், ஒரு மாபெரும் குழப்பமானது ஏற்படுகிறது. மற்றொரு நிலைப்பாடு: பிறருக்கு நீங்கள் நன்மையை உரைத்தாலும், உரைக்கின்ற நிலைகளை ஒருவருக்குள் கேட்காமல் செய்வது இந்த அசுர கிரின்னியர்களின் பராக்கிரமம் ஆகும்.

இன்று பூவுலகில் ஒருவருக்கு நீங்கள் நன்மையை ஏதுவான நிலைகளில் சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இல்லையென்றால் உன் சுபாவத்திலும் வார்த்தையிலும், உனது தார்மீக நிலைகளையும், அறிவார்ந்த நிலைகளையெல்லாம் குற்றம் சுமத்தி, அதுவரை போற்றியவர்களெல்லாம் அவதூராக மாற்றும் நிலைகள் ஏற்படும்.

இந்த அகம்பாவம் உள்ளவர்கள் உறங்குவதைப் போன்று பாசாங்கு செய்பவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் நன்மையை உரைப்பது காட்டிலும், அமைதியாக உங்கள் கடமையைச் செய்தால் அவர்களின் சாபத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

அது சாபமாக மட்டும் அல்லாமல், அவர்களும் உன்னை நிந்தித்து, சுற்றுப்புற சுழலும் உங்களை நிந்திக்கும் நிலையை ஏற்படுத்துவார்கள். அதுவரை வல்லவனாக விளங்கிய ஒருவனை துரோகியைப் போல் சித்தரிக்கச் செய்வார்கள்.

இந்த ஆற்றலை ஈர்க்கின்ற கீழான நிலைகளில் இருக்கின்ற மாமிச பிண்டங்களின் நிலைகளால், இவர்களின் மனதை அசுர கந்தர்வர்கள் வசப்படுத்துகின்றதினால் இந்த நிலை ஏற்படுகிறது.

இயல்பாக காமத்தின் உச்சத்தில் இருக்கின்ற ஒருத்தனுக்கு, ஏதேனும் நல்ல சூழ்நிலை அமைந்தால், தான் பெற்ற உதிரமிடமே அந்த இச்சைகளை தீர்த்துக் கொள்ள நினைப்பான்.

பெரும்பாலும் ஸ்ரீகளுக்கு அசுர கிரின்னியர்களும், ஆண்களுக்கு அசுர கிரின்னிகளும் ஆட்கொள்ளுகிறார்கள். ஆகையால் தான் இந்த மாறுபட்ட எண்ணங்கள் இருக்கிறது.

அசுர கந்தர்வர்களின் நிலைபாடுகளுக்கு தீர்வு

உள்ளக்கனி, தங்கக்கனி என்று சொல்லபடுகின்ற நெல்லிக்கனியை, எவன் ஒருவன் பிறந்த நாளிலோ, அதை சார்ந்த ராசி நட்சத்திரத்திலோ, அல்லது சஷ்டி, துவாதசி வருகின்ற நாளிலோ, ஜோதியை ஏற்றி வைக்க இந்த தோஷமானது நீங்கும்.

ஜோதியிலிருந்து வெளிப்படுகின்ற ஒளி கற்றைகலானது, அரங்கம் முழுவதும் நிரம்பி, உங்களின் சுவாசத்தின் வழியாக உள்சென்று, உங்கள் மனதை ஆட்கொண்டிருக்கின்ற கிரின்னியர்களின் நிலைப்பாட்டை செயலற்ற நிலைகளுக்கு எடுத்துச் சென்று அவர்கள் இந்த தேகத்திலிருந்து வெளிவிட்டுச் செல்கிறார்கள்.

தேவ கிரின்னியர்களளின்  செயல்

இந்த தேவ கிரின்னியர்கள் உங்கள் சுவாசத்தின் வழிகளில் மட்டுமே சஞ்சரிப்பார்கள். இவர்கள் மனதை ஆட்கொள்ளமாட்டர்கள்.

அவர்கள் இந்த முச்சந்தி என்று சொல்லப்படுகின்ற இந்த மூன்றாம் கண்ணிலே நிலைத்து, மேல்நோக்கி அந்த ஜோதியின் அனுபவத்தை ஏற்படுத்துவார்கள்.

அவர்கள் இந்த முச்சந்தியிலே நிலைத்தால், ஒளியின் கூர்மையானது அஷ்டத்தை(உச்சி)  நோக்கி இருக்கின்ற நிலைகளாக அங்கு இருக்கும்.