குருமகாத்மியம்- முக்கண்ணனின்(குருமகான் பரஞ்சோதியாரின்) உத்தம கூடாரம்(வம்சம்)

சத்குருவே சரணம்

(இடைக்காடர் சித்தர் அருளியது)

குருகுலங்களிலே பல்வேறு குருகுலங்கள் இருக்கின்றது. வாள்வீச்சுக்கள், போர் கருவிகளை பயிற்சிக்கின்ற குருகுலங்கள், அதன் தந்திரங்களையும் சூத்திரங்களையும் பயில்விக்கின்ற குருகுலங்கள், கல்விகளை படிக்கின்ற குருகுலங்கள், மந்திரங்களை சொல்லித்தரவல்ல குருகுலங்கள், தீவினைகளையெல்லாம் செய்வதற்கு சொல்லித்தருகின்ற குருகுலங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இவைகளினுடைய மொத்த எண்ணிக்கை எதுவோ, அதிலே அரிதினும் அரிதான ஆயிரத்தில் ஒரு பங்கு அளவு உடையவர்கள் மட்டுமே இந்த ஞானத்தை உரைக்கவல்ல பெரும்பேர் பெற்றவர் ஆவார்கள்.

அந்த ஆயிரத்தில், லட்சத்தில், கோடிகளில் இருக்கின்ற ஒரு சதமானம், அதிலும் ஒரு சதமானம் மட்டுமே, இந்த ஞானத்தை பிறர் அறிய முற்படுகின்ற பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.

இதிலேயும் ஒரு சதமானம் மட்டுமே தன்னலம் பாராது, தன்னுடைய வித்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுக்கின்ற உபதேசிக்கின்ற உத்தமர்களாக இருப்பார்கள்.

அந்த ஒரு சதமானர்களிலே, ஒரு சதமானர்கள் மட்டுமே பிறருக்கு இந்த கலையை, தான் அறிந்த இந்த வரத்தை, இந்த பிரம்மத்தை சொல்லித்தரவேண்டும் என்ற அவாவானது ஏற்படுகின்றது.

இதிலேயும் ஒரு சதமானர்கள் மட்டுமே இப்பணிகளை சிறப்பாகச் செய்கிறார்கள்.

இதிலேயும் ஒரு சதமானர்கள் மட்டும், புவியை ஒரு நேத்திரமாகவும், விண்ணை ஒரு நேத்திரமாகவும் கொண்டு, ஆழ்ந்த புலமையும், அறிவும், சித்தமும், நித்தமும் அந்நிலைகளைப் பூரணமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உத்தம கூடமே, இந்த முக்கண்ணனின் கூடாரமாகும்.

இந்த கூடாரத்தில் தஞ்சம் கொள்பவர்கள், இதை நோக்கி பயணம் கொள்பவர்கள், இந்த கூடாரம் இருக்கின்ற இடத்தை அறியவேண்டும் என்று அறியமுற்பட்டாலோ, அல்லது அந்த பிராப்தம் ஏற்பட்டாலோ அன்றி, இந்த கூடாரத்தை அறியவே முடியாது.

பின்னர் இந்த கூடாரத்தை அறிந்தவர்களிலே, இங்கே அடைக்கலம் புகவேண்டும் என்று எண்ணுபவர் சிலர். இங்கே நிலைக்கவேண்டும் என்பவர் இன்னும் சிலர்.


நிலைத்த கூடாரத்தில், நிலையான ஒன்றை பற்றவேண்டும் என்று கருத்தில் கொள்பவர் இன்னும் சிலர்.

பற்றவேண்டும் என்ற எண்ணத்தை சரியான முறையில் பயன்படுத்தி அதை போற்றுபவர் அதிலும் சிலர்.

பிறருக்கு இந்த பற்றல்களை குரு மொழியாக எடுத்துச் செல்லவேண்டும் என்பவர்கள் அதிலும் சிலர்.

எண்ணியதோடு நிற்காமல், எண்ணிய நிலைகளில் பூரணமாக இந்த தர்மத்தை ஆற்றுபவர்கள் இன்னும் சிலர் ஆவார்கள்.


அந்த சிலரில் சிலர் மட்டுமே ஜோதிகளாக பிரகாசிப்பார்கள்.

ஆகவே உங்களின் முற்பிறவிகளில் பூரண சங்கல்பங்களினாலே நீங்கள் இந்த கூடாரத்தை அடைகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

பல வித்தைகளை உரைப்பதற்கு எத்தனையோ குருமார்கள் இருக்கின்றார்கள்.

இந்த ஒரு சதமானம் என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்றால், எத்தகைய உயர்ந்த ஒரு முக்கண்ணனை நீங்கள் உங்கள் வாழ்நாளிலே பற்றி இருக்கிறீர்கள் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

நீங்கள் எத்தனையோ பிறவிகளில் தேடித்தேடி, வனாந்தரங்களில் வழியைத் தேடித்தேடி ஒருவன் நடப்பது போன்று, நீங்கள் தேடித்தேடி மீண்டும் மீண்டும் கருவாசலும், எருவாசலுமாக சுற்றி, இறுதியிலே எப்படி அந்த வனாந்திரத்தில் சுற்றுபவன், இறுதியில் ஒரு குருகுலத்தைக் கண்டுவிட்டால், அவன் மனம் எத்தகைய சந்தோஷத்தை ஆட்கொள்ளுமோ, அதேபோன்று நீங்களும் பல பிறவிகள் கழிந்து கழிந்து ஆத்மமும் தேய்ந்து தேய்ந்து, தேய்ந்த நிலைகளில் தற்போது இந்த முக்கண்ணனின் கூடாரத்தை வந்து அடைந்திருக்கிறீர்கள்.

கலியுகத்தின் கோரம்

கலி யுகத்தின் முற்று மிகவும் கொடுமையானதாக இருக்கும். எவரிடமும் தர்மத்தை எதிர்பார்க்கமுடியாது.

இந்த கலி யுகத்தின் முற்றைச் சொல்லவேண்டும் என்றால், திருமணம் ஆன இருவரும் ஒரே கூடாரத்தில் இருந்து, கணவன் வேறு ஒருவரின் மனைவியுடனும், மனைவி வேறு ஒருவரின் கணவனுடனும் உறவு கொள்வது, ஒரு நாயை விட கேவலமான நிலைகளில், ஒரு ஆணுக்காக பத்து பெண்கள் சண்டையிட்டுக் கொள்ளும் அவலங்கள் ஏற்படும்.

தாய்-குழந்தை, தனயன்-தங்கை என்கின்ற உறவுகள் எல்லாம் வேரறுத்து, அனைத்தும் போகிக்கவல்ல நிலைகளாகவே மாறி விடும்.

இயற்கையும் தறிகெட்டு ஓடும். இந்த பஞ்ச பூதங்களும் தறிகெட்டு இயங்கும். எங்கும் எதிலும் ஸ்திரம் இருக்காது.

மனிதன் ஸ்திரம் இல்லாத ஒன்றை ஸ்திரம் என்று நிலைத்து தன் வாழ்க்கையை தொலைக்கின்ற நிலைகள் ஏற்படும்.

கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு தன் இன்னுயிரை வருத்தி, இறுதியிலே, அவன் யாரோ ஒருவனை வாழ்விப்பதற்காக அவன் வாழ்க்கை ஏற்படும்.

அனைவரும் மூடர்களாகி, பகுத்தறிவை இழந்து, சொல்லறிவு, செயலறிவு ஆகியவற்றை இழந்து, மீண்டும் காட்டு மிராண்டிகளாக, தங்க ஆபரணங்கள் பூட்டிய ஆதி வாசியாகத் திரிவார்கள்.

வெளுத்த உடையை அணிந்த மனித கயர்வர்களாகத் திரிவார்கள்; பசுத்தோல் போர்த்திய கொடிய மிருகங்களாக அலைவார்கள்.

பிரஜைகள் இவ்வாறென்றால், அரசன் அதைவிட உயர்ந்த நிலைகளில் இருப்பான்.

நெறிமுறை, விதிமுறை, வழிமுறை அற்ற வாழ்க்கையை வாழுகின்ற நிலைகளெல்லாம் இந்த கலியுகத்தின் முற்றிலே ஏற்படவிருக்கின்றது.

இவைகளையெல்லாம் சற்று சீர்படுத்துவதற்காகவே இந்த வம்சம் தோன்றியுள்ளது.