குருமகாத்மீயம் – ஒரு சதவீத உணர்வாளர்கள்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!
இடைக்காடர் சித்தர் அருளியது!

இன்றைய காலங்களில், மனித குலம் இருபெரும் நிலைகளுக்கு மட்டுமே இந்த ஆலயத்திற்குச் செல்கிறார்கள்.

– ஒன்று தன்னுடைய சுய தேவைகளை சரி செய்வதற்காக.

– மற்றொன்று பிறரின் குடியைக் கெடுப்பதற்காக.

இன்றைய பண்டிதர்களோ ஜோதிடம் என்று சொல்லப்படுகின்ற இந்த ஜோதியின் இடத்தை அவரும் அறியாமல்,  வாய்க்கு வந்ததையெல்லாம் எடுத்துரைத்து, தன் நாவில் சரஸ்வதி இருக்கிறாள் என்ற உண்மையை மறந்து, குருட்டு அறிவிலிருந்து பரிகாரமெல்லாம் சொல்லி பிறரின் குடி கெடுத்து வருகிறார்கள்.

துன்பம் என்பது ஒருவரின் ஆத்ம பாதையை கடந்து செல்வதற்கு என்ற உண்மையை உணராமல், துன்பத்தின் காரணம் ஒன்று இருக்க, காரியத்திற்க்குரிய பரிகாரங்களைச் சொல்லி, அந்த மனிதனும் ஆலயத்திற்க்குச் செல்வதும், தீபம் ஏற்றுவதும், தேங்காய் உடைப்பதும், இப்படி அவனுடைய வாழ்க்கையை கழிக்கிறான்.

இன்னொரு புறம் தாந்த்ரீகமெல்லாம் செய்து, நன்றாக வாழ்கின்ற மனிதனின் குடியைக் கெடுத்து, எல்லோரும் குடிகெட்டவர்களாய், ஒழுக்கம் கெட்டவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த பூமியிலே யார் இந்த தர்மத்தை நிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஏற்படவேண்டும். 

முக்கண்ணனாம் பரஞ்சோதிக்கு மட்டும் ஏற்பட்டால் போதாது. அவனின் சிருஷ்டிகள் நீங்கள் அனைவரும் தான்!! அந்த சிருஷ்டிகள் தன்னுடைய பிராப்தத்தை அறியாது,  பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்கள். 

எவ்வாறு சக்கரை ஒவ்வாதவன், இனிப்புகளை எடுத்துக்கொண்டால் வியாதிகள் வருமோ, அதேபோல் பிராப்தத்திற்கு ஒவ்வாத நிலைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அது உங்களுக்கு துன்பமே ஆகும்!!  

இவ்வுலகில் 90 சதவீத மக்கள் இப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், மீதம் 10 சதவீதத்தில், 9 சதவீதம் வரட்டு அறிவிலிருந்து ஞான சூத்திரத்தை உபதேசித்து, எல்லோரையும் பதருகளாக்கி, அவனும் பதராகி, மனிதகுலம் செத்து முடிகிறது.

மீதம் 1 சதவீத மக்கள் இந்த முக்கண்ணனாம் முப்பெரும் ஜோதியை, கடுமையான பிராப்தத்தின் மூலம் அடைந்து, அந்த உண்மையை உணர்ந்து, உண்மையின் ஏகோபித்த நிலைகளை உணர்ந்து, குருவின்பால் சரம் புகுந்த  நிலைகளிலே, தான் எதனில் நிபுணத்துவம் பெறவேண்டும் என்று அறிவில் தெளிவில்லாமல், அறிவின் மயக்கத்தால், தன் முற்பிறவி வாசனைகளினால் ஏற்படுகின்ற எல்லா கவர்ச்சிகளையும் பற்றிக்கொண்டு, ஆத்ம விசாரம் இன்றி, நிபுணத்துவம் இன்றி, அவனும் செத்து மடிகிறான். இதுவே இந்த காலத்தின் சுழற்சியாக இருக்கின்றது!!

ஆகவே என் அன்பிற்குரியவர்களே, இனி வருகின்ற நாட்களில் இந்த தென்னகத்தின் குருமுனியாம், அவன் வாசம் செய்கின்ற சத்திய லோகத்திலே, ஒரு உபதேசத்தை பெருவதன் மூலம், உங்கள் வாழ்விலே நீங்கள் எப்பேற்பட்ட பதவிகளை அடைகிறீர்கள், அதை நீங்கள் எவ்வளவு துச்சமாக உங்கள் வாழ்வில் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்ற உண்மையின் மொழியை, இனி வருகின்ற மொழியில் உபதேசிக்க இருக்கிறோம்.

இதைக் கேட்ட பிறகு இந்த கிழவனை வெறுத்தாலும், சபித்தாலும், நிந்தித்தாலும் சரி! இந்த கிழவன் உங்கள் எண்ணத்திற்கும், உங்கள் சாபத்திற்கும் அப்பார்பட்டவன்.

ஆனால் இந்த முக்கண்ணனாம் முப்பெரும் ஜோதியை இந்த உலகத்திலே வியாபித்து நிலைப்படுத்தி, அகிலமெங்கும், எட்டு திக்கிலும் இவனின் ஆற்றல், மகாத்மீயம் பரவும் என்பதை நீங்கள் ஒருபோதும் மறவாதீர்கள்!!

அன்று விஸ்வாமித்திரரோடு சென்ற காரணத்தால் தான், இன்றும் காலத்தால் அழியாத இராமனாக இருக்கிறான். 

நீங்களும் வருங்கால உலகத்திற்கு இராமனாக விளங்க இந்த கிழவன், சித்தலோக மகாஜமிக்கைகள் உங்களுக்கு நல் ஆசிகளை வழங்குகிறது!!!