குருமகாத்மீயம்- நவ தத்துவம்: மைய்ய சக்கிரங்களும் நவ கோள்களும்

சத்குருவே சரணம் ! சந்தோசம் !
(இடைக்காடர் சித்தர் அருளியது)

ஒரு மனிதனினுடைய பிறந்த குறிப்புகளுக்கும், கிரஹ குறிப்புகளுக்கும், அவனின் ஆதார மையங்களில் இருக்கின்ற அந்த மையத்திற்கும் மாபெரும் தொடர்பு இருக்கின்றது.

ஒரு மனிதனின் லக்கினமே உயிராகிறது!
அவனின் நட்சத்திரமே சித்தமாகிறது!
அவனின் ராசியே உடலாகிறது!

சற்று முன்னர் காலங்களிலே ஒரு மனிதனினுடைய கிரஹ குறிப்புகளை, அவருடைய ஆதார மையங்களையே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது இந்த ஜோதி என்னும் ஜோதிட சாஸ்திரம்!

அது காலத்தின் வறட்சியால், வழிவழியாக சரியான முறைகளில் உபதேசிக்கப்படாத காரணத்தினால், இந்த மண்ணுலகை விட்டே நீங்கிச் செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

கிரஹங்களிலிருந்து, விண்ணிலிருந்து, அற்புதமான சக்திகளை எவ்வாறு ஒவ்வொரு ஆதாரங்களில் ஈர்க்கப்படவேண்டும் என்ற சூக்குமத்தை, குருமகான் பரஞ்சோதியின் உத்தரவுடன், உபதேசமாகவே இந்த சித்த லோக ஜமிக்கைகள் மூலம் இங்கு வழங்கப்படும்.

ஒரு மனிதன் எத்தகைய லக்கினத்தைச் சார்ந்து இருக்கிறானோ அவன் அந்த லக்கினத்திற்கு உரியவனாகிறான். அந்த லக்னத்திற்கு உயிர் மைய்யம் எதுவோ அந்த மைய்யத்தை அவன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக வைக்கவேண்டியது அவனுடைய கடமையாகும்.

இந்த லக்னத்திற்கு இருக்கின்ற தொடர்பும் அவனுடைய உயிர் மையங்களில் இருக்கின்ற இணைப்பும் நன்றாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அவன் விதியை வெல்பவனாகிறான்.

அண்டத்தில் இருக்கும் அத்துனை பொருட்களும் பிண்டமாகிய மனிதனின் உடலில் இருக்கிறது.

பிரம்ம முகூர்த்தத்திலே, நீங்கள் உங்களின் பிராணனை அந்தந்த கோள்களுக்குத்(அண்டம்) தொடர்பான ஆதார மையங்களோடு(பிண்டம்) இணைக்கும்போழுது கோள்களினுடைய எதிர்மறை வீச்சுகள், சற்று குறையும்.

நவகோள்களின் இயக்கங்களுக்கும், அதற்க்கு தொடர்புடைய மனிதனின் ஆதார இயக்கங்களுக்கும், பிராணனே தொடர்பாக விளங்குகிறது.

இந்த பிரம்ம சூத்திரத்தை, இந்த பிரம்மத்தின் தன்மையை ஒரு போதும் மறவாதீர்கள்!!!

கோள்களும் அதன் தொடர்பான ஆதார மையங்களும்

மூலாதாரம் (நில மையம்) : சூரியன்
ஸ்வாதிஷ்டானம் (நீர் மையம்) : சந்திரன்
மணிப்பூரகம் (வெப்ப மையம்): அங்காரகன் என்ற செவ்வாய்
அனாஹதம் (காற்று மையம்) : கரியவன் என்ற சனி
கண்டம் (அணு மையம்) : புதன்
ஆக்கினை (ஞான மையம்) : குரு
உச்சி (பர மையம்) : சுக்கிரன் (விண் சக்திகளை, விண்ணிற்குரிய உயிரினங்களை, உயிர் ஆற்றலை, விண்ணில் இருக்கின்ற உயிர்ப்பு திறனை குறிக்கின்ற மையம்)

ராகு கேது

-உங்களின் இருபெரும் வாசி துவாரங்கள்

-மற்றொருபுறம், குய்யம் கேதுவாகவும், குதம் ராகுவாகவும் விளங்குகிறது.

நவத்தை கடந்த நிலைகளில் குருமகான்

சித்த லோகத்தில் இருக்கின்ற நாங்கள் பிராணனோடு கோள்களை இணைத்து, நவ கோள்களிலிருந்து விடுபட்டு, நவமற்ற நிலைகளில், நவத்தின் பரமாய் விளங்குகின்ற ஆதி ஜோதியோடு கலந்து இருக்கின்றோம்! உனது குருவின் நிலைப்பாடும் அதுவே!!

குருவின் உடலின் நிலைகளுக்கு கோள்களினுடைய தாக்கங்கள் இருந்தாலும், அவரின் உயிர் நிலைகள், குரு என்கின்ற அந்த இறை நிலைகளுக்குள்ளே இருக்கும் பொழுது, மகாசக்தியினுடைய அம்சமாய், மகாசக்தியின் பூரணத்துவத்திலே இருப்பதால், கோள்களும், அதன் தாக்கங்களும் அவருக்கு ஏற்படுவதில்லை!!

நவகூட்டில் லக்ன கட்டம்: மனதை உயிர் நோக்கத்திற்கு உயர்த்தும் சூத்திரம்

கோள்கள் என்பது புறத்தில் அல்ல, நம் அகத்தில் ஒவ்வொரு உயிர் மையங்களிலும் அது இயங்குகிறது.

உன்னுடைய லக்னம் எதுவோ, அது உன் உயிர் மையத்தைக் குறிக்கிறது.

உதாரணத்திற்கு, ஒரு மனிதனுக்கு விருச்சிகம் லக்னமாக இருந்தால், அந்த விருச்சிகத்தினுடைய அதிபதி அங்காரகன் (செவ்வாய்).

செவ்வாய் வாழுகின்ற இடம் மணிப்பூரகம்

ஆக ஒருவனுக்கு மணிப்பூரகமே உயிர் மையமாய் இருந்து, அது சரியாக செயல்படாவிட்டால், அவனுடைய உடல், உயிர், மனம் சார்ந்த விஷயங்களிலே துன்பங்களும்; நல்ல முறையிலே இயங்கும் பொழுது எல்லா விதமான நன்மைகளையும் பெறுகின்றான்.