குருமகாத்மீயம் – சிரத்தை வேதியரின் (மெய்ஞான ஆசிரியர்) கடமை

சத்குருவே சரணம்! சந்தோசம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

ஒவ்வொரு சிரத்தை வேதியர்களும் உபதேசத்தை அளிக்கும்பொழுது, அந்த ஒளியெனும் தன்மையை பதிக்கின்றார்கள். அதுவே உனது குரு உனக்கு கொடுக்கின்ற உபதேசத்தின் உண்மையாகும்.

தன்னுடைய ஒளியை, தன் விருட்சத்தில் வந்து சேருகின்ற அனைவருக்கும், முதலிலே ஒளியெனும் பதக்கத்தை, ஒரு அங்கத்தை பதிக்கின்றான்.

அதை பதிக்கப் பதிக்க அந்த வம்சம் விருத்தியாகும் என்ற உண்மையை உணர்வீர்கள்.

ஒரு சிரத்தை வேதியர், ஒருவருக்கு  இந்த உபதேசத்தை, சத்தியத்தை நிலைநாட்டும் பொழுது, அதாவது அந்த சக்தியை மேலெழுப்பி ஜீவன் ஒளிபெற்று, அந்த ஒளியைக் காண்பிக்கும் விதமாக, பரஞ்சோதி என்னும் ஒளியின் தன்மையை  அங்கு பதிக்க, அவனுக்குள்ளே அந்த சக்தி நவமாய் திகழ்ந்து, நவத்தை பெறுகின்ற அதிகாரத்தை அவன் பெறுகிறான்.

இவ்வாறு முறைப்படி உபதேசம் பெறாத நிலைகளில் நவத்தை எட்ட இயன்றால் புத்தி பேதலித்து, ஆடைகளின்றி தெருவில் நிற்கின்ற அவலங்கள் ஏற்படும். ஏனென்றால் பூமியெனும்  அண்டத்தின் சுழற்சியும், ஒரு மனிதனின் பிண்டத்தின் சுழற்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. 

அண்டத்தின் ஈர்ப்பும், பிண்டத்தின் ஈர்ப்பும் ஒரு நேர்கோட்டுப் பார்வையிலேயே இருந்து கொண்டிருக்கும். 

இந்தப் பாதை சற்று மாறும் பொழுது, அதற்குரிய சக்திகளை முறைப்படுத்தவில்லை என்றால், இந்த இரு நிலைகளும் சரிவர ஒத்துப்போகாமல், இயற்கையில் மாறுதல் ஏற்பட்டு, அவன் புத்தி பேதலித்து, உடல் கூறுகளில் நாசம் ஏற்பட்டு, அவன் மடியும் நிலையை எய்துகிறான். இது யோகத்திற்க்கே இழுக்காகும். 

தற்பொழுது சிரத்தை வேதியர்கள் ஏதோ ஒன்றை தொடுவது போன்று, ஒரு விளையாட்டுப் பொருளாக, விளையாட்டு நிலைகளில் இருந்து உபதேசத்தைத் தருகிறார்கள். அவர்களுக்குள்ளே அந்த உறுக்கமும், பயபக்தியும் வேண்டும். இந்த கிழவன் உரைக்கும் மொழியானது அவர்களுக்கு இந்த உண்மையை உணர்த்தும்.