குரு மகாத்மீயம் – குரு மந்திரம்

சத்குருவே சரணம் ! சந்தோசம் !

(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது

பூரண நிலவாகிய, பூரணம் பெற்ற பூரணமான பூரண ஜோதியே பரஞ்ஜோதி,  அந்த பூரண பொருளை பற்றி, பூரண பொருளோடு இணைந்திருப்பதால் நீங்களும் அந்த பூரணப்பொருளின் தன்மையை பெறுகிறீர்கள்.

பூரணப்பொருளின் தன்மையை, பூர்ணனைப்  பெற்ற காரணத்தால்,  இந்த சித்த லோகத்தில் இருக்கின்ற ஜமிக்கைகள் உங்களை வாழ்த்துகிறது.

கால நிர்ணயம்

பூமியிலும், பிரபஞ்சத்திலும் 64 ஜோதியிலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு கால நிர்ணயம் உண்டு.

இந்த கால நிர்ணயத்தின் முடிவு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று காலத்தின் இறுதியில் அழிந்து செல்கிறது.

மற்றொன்று காலத்தின் நிர்ணயத்தால், காலத்தின் முடிவில் அந்த முடிவை அடையும் பொழுது அது தானாக சுருங்கி, சிறுக சிறுக இயல்பையெல்லாம் இழந்து இயலற்ற நிலைக்குச்சென்று, இயல்பில்லாத நிலையிலிருந்து மடிகிறது.

கால சுழற்சியில் குரு மந்திரத்தின் சிறப்பு

ஒரு மனிதன் குரு என்னும் சொல்லைக் கேட்கவில்லை என்றால், குரு என்கின்ற நாமத்தைச் சொல்லவில்லை என்றால், அந்த பரம்பொருளாகிய இந்த பரஞ்ஜோதியை அவன் வாழ்விலே 108 முறைகூட உபதேசிக்கவில்லை என்றால், இந்த பிரபஞ்சத்திற்கு அந்த பரஞ்ஜோதி  என்கின்ற உன்னத நாமத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், அவனுக்கு உயிரானது தேய்ந்து, உடலின் பலமும் குன்றி, சிறுக சிறுக ஒன்றுமற்றவனாய், ஓருயிர் பிராணியைப்போன்று திகழப்பெறுகிறான்.

வாழ்விலே எந்த ஒரு ஜீவராசியும், எந்த ஒரு ஜீவராசியின் செவிகளுக்குள்ளே  சென்று 108 முறை பரஞ்ஜோதி நமஹ என்கின்ற மாமந்திரத்தை உபதேசித்தால் அந்த உயிர் அடுத்த நிலைகளுக்கு செல்லும்.

ஒரு பிராணிக்கே  108 முறை என்றால், ஆறறிவு படைத்த உன்னத உயரிய பிரம்ம சூத்திரங்களை அறிய முற்படுகின்ற, அறிந்திருக்கின்ற உங்களின் மனமானது அந்த பரஞ்ஜோதி  என்கின்ற குருவின் நாமத்தைச்சொல்லி, காதால் கேட்டு, அந்த குருவின் உருவை தான் கண்ணால் பார்த்து, ஒருமுறையேனும் குருவை ஸ்பரிசித்தாலன்றி அவன் வாழ்நாளிலே  வெளிச்சத்தில் இருந்தாலும் இருள் பெற்றவனாகவே பிறரால் இகழப்படுவான்.

அப்பேற்பட்ட துரோகிக்கு, அப்பேற்பட்ட வஞ்சகனுக்கு, மீண்டும் மீண்டும் ஈனப்பிறப்பெடுத்து, ஈனப்பிறவியாய், ஈனத்திலும் ஈனனாய், முண்டியாய், குருடனாய், செவிடனாய் என எல்லா அவயங்களிலே ஏதாவது ஒரு குறைபாட்டைக் கொண்டு பிறப்பவன் ஆகிறான்!!

ஆகவே வாழ்விலே ஒவ்வொரு மனிதனும்  எத்தகைய குலத்தைச் சார்ந்தவராயினும், எத்தகைய தர்மத்தை சார்ந்தவராயினும், 108 முறையேனும் அந்த குருவின் நாமவெளியை குருவின் உன்னதத்தை, சத்தியத்தை, நித்தியத்தை, பராக்கிரமத்தை, அதிசயத்தை, ஆழ்ந்து சிந்தித்து கடந்து உள்ளே சென்று அந்த குருவின் மையத்திலிருந்து குருவை நினைத்தல், நிலைத்தல், கலத்தல். ஒருமித்து செயல்படுதல்! செயல்படுதல்! செயல்படுதல்!

ஆதி மனிதனுக்கு குருவே அந்தம்! அந்த அந்தத்திற்கு  இதுவே மோட்சத்தை அளிக்கும்.